விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ராமர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்டாக சின்னத்திரையில் அறிமுகமானவர். இவர் காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது பல வசனங்களை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். மீம்ஸ், ஸ்டிக்கர் என சமூகவலைதளங்களில் இவரது வசனங்களுக்கு தனி மவுசு உண்டு.
விஜய் டிவியின் ஆஸ்தான காமெடியனாக ராமர் விளங்குகிறார்.
சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு சுற்றில் இவர் நடித்த காமெடி வைரலாகியது. மற்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை மையமாக வைத்து நடித்த காமெடி மிகுந்த வரவேற்பு பெற்றது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. சிவகார்த்திகேயன் படத்தில் பாடலாகவும் இடம்பெற்றது.
முதியவர், பெண் வேடம் என காமெடி கதைக்கு ஏற்ப பலவித வேடம் அணிந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். சமீபத்தில் இவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியானது. அரசு அதிகாரியாக பணிபுரிவதாக தகவல் வெளியானது. 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார் என தகவல் வெளியானது. நகைச்சுவை நடிகராக இருக்கும் ராமர், அரசு அதிகாரியாக இருக்கிறார் என தெரிந்ததும் பலரும் இவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி, தொகுப்பாளர் என அறிமுகமானவர்கள் பலர் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். அந்த வகையில் ராமரும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘கொளத்தூரான்’ என்ற படத்தின் மூலம் ராமர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஜூலை 29ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. பலருக்கும் இந்த படம் பற்றி தெரியவில்லை. படத்தின் ட்ரெய்லர் கூட முன்பே வெளியிடப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் தெரியவில்லை. புது முகங்கள் படத்தில் நடித்துள்ளனர். காதல் காட்சிகளும் படத்தில் உள்ளது. கார்த்திக் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் படத்தை வழங்குகிறது. ‘ஆடு புலிகிட்ட வசமாக மாட்டிக்கிச்சு, அடிச்சு தூக்கிடேன்’ என ராமர் பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.
படம் குறித்து பார்வையாளர்கள் கூறுகையில், “மதுரையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. ராமர் நன்கு நடித்துள்ளார். வித்தியாசமாக உள்ளது. நகைச்சுவை நடிகராக பார்த்த ராமரை இதில் வித்தியாசமாக காட்டியுள்ளனர். ஊர் குளத்தை காப்பற்றுவது போல் கதை களம் உள்ளது. அடிதடி ஆக்ஷன் சூப்பராக உள்ளது” எனக் கூறினர். வெகு சில திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியாகியுள்ளது.