சித்ராவின் மறைவுக்குப் பின் அவரைப் பற்றிய கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவது அநாவசியமான செயல் என நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி தெரிவித்தார்.
தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் காணொளி காட்சியின் மூலமாக உரையாடிய அவர், சித்ரா இல்லாத இந்த நேரத்தில் அவரைப் பற்றி பேசுவது தேவையற்ற செயல். சித்ரா மிகப் பெரிய இழப்பு. அடுத்து யாரு என எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவருடைய இனிமையான நினைவுகளோடு வாழ முயற்சி செய்து வருகிறோம். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில், சித்ராவைப் பற்றி விதவிதமாக கதைகளை சிலர் கட்டிக்கொண்டு வருகின்றனர். அடுத்தவர்களுக்கு உங்களால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும், தீமைகளை செய்திராமல் இருங்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், தயவு செய்து நடிகைகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்து கொண்டு ஒவ்வொரு வதந்தியாக பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள்அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து 2முறை மீனட்சியாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ரக்ஷிதா மகாலட்சுமி.