விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் புரோமோவில் தாலியை வைத்து பெண்களை வன்கொடுமை செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளதற்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை துன்புறுத்தினால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ள கருத்தால் விஜய் டிவியின் புதிய சீரியல் புரோமோ சமூக ஊடகங்களில் சர்ச்சை புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ என்ற பெயரில் ஒரு புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில், ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியலில் நடித்த வினோத் பாபு, ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த பவித்ரா ஜனனி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், “பவித்ரா அமெரிக்கவில் படித்துவிட்டு சொந்த ஊர் திரும்புகிறார். பவித்ரா கோயிலுக்கு செல்லும்போது அங்கே பாட்டி ஒருவர் பவித்ராவிடம் அமெரிக்காவில் படித்திருந்தாலும் பாரம்பரியத்தை மறக்காமல் இருப்பதாக புகழ்கிறார். கோயிலில், கல்யாண பொண்ணு பேருக்கு தானே அர்ச்சனை? எனக் கேட்பதிலிருந்து அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருப்பது தெரிகிறது. அந்த நேரத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரை சீரியலின் ஹீரோ வினோத் பாபு, இதெல்லாம் தப்பு என்றவாறு, அந்தப் பெண் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டச் சொல்லி மிரட்டுகிறார்.
இதை பார்க்கும் பவித்ரா, “இது என்ன காட்டு மிராண்டி தனம்.. அம்மன் சாட்சியா கல்யாணம் நடந்திருக்கு. இதை அவிழ்க்க உனக்கு என்ன உரிமை’ என்கிறார்.
அதற்கு வினோத் பவித்ராவிடம் “ஒரு மஞ்ச கயித்த கட்டுனா, உடனே அதுக்கு பேர் கல்யாணமா?’ என்றவாறு சாமி கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து பவித்ரா கழுத்தில் கட்டிவிட்டு, நெற்றியில் குங்குமமும் வைத்து விட்டு, ‘இப்போ நா உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சிட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா? போவியா’ என்றவாறு அங்கிருந்து புறப்படுகிறார். பவித்ரா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார். இதற்குப் பிறகு, பவித்ரா, தாலி கட்டிய வினோத்தை கணவனாக ஏற்றுக்கொண்டு அவரை திருத்தி அவருடனே வாழ்வார் என்று பார்வையாளர்கள் பலரும் சீரியலின் கதையை யூகித்து உள்ளனர்.
தாலியை வைத்து இது போல அதிரடியாக பெண்களை துண்புறுத்தும் விதமாக விஜய் டிவியின்‘தென்றல் வந்து என்னைத் தொடும்’சீரியல் புரோமோ வெளியாகி இருப்பதாக பத்திரிகையாளர்கள், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவிதுள்ளனர்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் புரோமோவைக் குறிப்பிட்டு தமிழ் சீரியல்களும் அவர்களுடைய விஷக் கருத்துகளும் என்று கண்டித்து பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள், பலரும் இந்த சீரியல் புரோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விஜய் டிவியின் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் புரோமோவுக்கு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் டிவியின் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் புரோமோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார், இப்படி யாரவது பெண்களை துண்புறுத்தினா அவர்கள் மீது என்னென்ன சட்டம் பாயும் என்பதை தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4ன் படி, யாராவது பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் துன்புறுத்தலில் ஈடுபட்டால், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ( women harassment act ) பிரிவு - 4 கூறுவது என்ன ?
பெண்கள் மீது தேவையற்ற தாக்குதல் , அவர்களிடம் முறைதவறி நடத்தல் , ஆபாசமான முறையில் அவர்கள் முன் செய்கை செய்தல் குறிப்பாக சேலையைப் பிடித்து இழுத்தல் , தலைமுடியைப் பிடித்து இழுத்தல் , சீண்டுதல் , பாலியல் ரீதியாக தொல்லைக்கு உட்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசுதல் போன்றவைகள் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு - 4 ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் . இதற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனைகளோடு,அபராதமும் விதிக்கும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே IPC- இந்திய தண்டனை சட்டம் 354 என்ற பிரிவு பெண்களுக்கெதிரான குற்றத்தை வரையறுக்கிறது .
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் புரோமோ தாலியை வைத்து பெண்கள் மீதான் வன்முறையை தூண்டிவிடும் விதமாக இருப்பதால், பலரும் கண்டம் தெரிவித்திருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமார் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.