மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை சிறப்பிக்கும் விதமாக ‘சின்ன கலைவாணர்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிப்பரப்ப உள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகரான விவேக், தனது பகுத்தறிவு கருத்துக்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னனி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் விவேக். மேலும் கடந்த சில ஆண்டுகளாக கதையின் நாயகனாகவும் நடித்து வந்தார். இவர் கதை நாயகனாக நடித்த வெள்ளைப்பூக்கள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைதுறை மட்டுமல்லாமல், பொதுச் சேவைகளிலும் விவேக் ஈடுபட்டு வந்தார். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அறிவுரையின் பேரில் நட்டு வந்தார்.
இந்த நிலையில், நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 ஆம் தேதி உயிரிழந்தார். 58 வயதான விவேக்கின் மரணம் திரைதுறையினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், நடிகர் விவேக் அவர்களை சிறப்பிக்கும் வகையில், விஜய் டிவி சின்ன கலைவாணர் என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், விஜய் நட்சத்திரங்களான ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், ஆதவன், நந்தினியோடு இயக்குனர் வசந்த் அவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ் உள்ளிட்ட அவருடன் பணிபுரிந்த நகைச்சுவை நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் விவேக் அவர்களுடன் நடித்த மற்றும் பழகிய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாண், விவேக்கிற்காக கண்ணே கலைமானே பாடலைப் பாடினார். விவேக், ஹரீஷ் கல்யாணுடன் தாராள பிரபு படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர்.
விஜய் டிவி நட்சத்திரங்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று நட்டு விவேக்கிற்கு சமர்ப்பித்தனர். இந்த ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil