நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.
அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் இப்போது அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வியாழக்கிழமை நடிகர் சசிகுமார், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் கூறினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கேப்டன் விஜயகாந்த் இழப்பு என்பது பேரிழப்பு. அரசியல் கட்சி தலைவர், நடிகர் என்பதையும் தாண்டி அவர் நல்ல மனிதர்.
கேப்டன் விஜயகாந்த் எப்படி அனைவருக்கும் ஒரே உணவு அளித்தாரோ அதேபோன்று நான் கம்பெனி ஆரம்பித்த போதும் சொன்னேன். இதையெல்லாம் கேப்டன் விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொண்டேன். விஜயகாந்த் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருக்கலாம், பெரிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்திருக்க முடியும்.
எம்ஜிஆர் இறந்த போது எவ்வளவு கூட்டம் இருந்ததோ அதே கூட்டம் விஜயகாந்த் இறந்த போது இருந்தது, தற்போதும் இருக்கிறது. இன்னும் பொதுமக்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, அவர் பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக, சங்க கட்டிடத்திற்கு இருந்த கடனை பல நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி அடைத்திருக்கிறார்.
நடிகர் சங்க கட்டடத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டும். அவர் பெயர் வைப்பதில் தவறில்லை. தலைவர்களெல்லாம் கூடி அந்த முடிவை எடுப்பார்கள், என்று சசிகுமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“