Advertisment

எம்.ஜி.ஆருக்கு இணையானவர் விஜயகாந்த்: விறுவிறு அலசல்

விஜயகாந்த் அளவுக்கு ரஜினிகாந்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியவர் இன்றளவும் வேறு யாரும் இல்லை. விஜயகாந்தின் திரை சாதனைக்கு இதுவே மகுடம்.

author-image
WebDesk
New Update
எம்.ஜி.ஆருக்கு இணையானவர் விஜயகாந்த்: விறுவிறு அலசல்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்த தினம், ஆகஸ்ட் 25 அன்று கடந்து போயிருக்கிறது. இதையொட்டி விஜயகாந்தின் திரைப் பயணம் குறித்து இங்கு அலசுகிறார், விமர்சகர் திராவிட ஜீவா.

Advertisment

சினிமா, அரசியல் என இரு துறையிலும் வெற்றி பெற்றவர் என்கிற வகையில் விஜயகாந்த், தமிழக வரலாற்றில் தவிர்க்க இயலாதவர்.

கிராமத்து இளைஞர் விஜயராஜ், மதுரையில் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த அழகர்- ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். அங்கு சொந்த ரைஸ்மில்லை கவனித்துக்கொண்டிருந்தார். எந்தக் கனவுகளும் இல்லாத அவரை உசுப்பி விட்டவர்கள் அவரது நண்பர்கள்தான்!

கருகருவென ஜல்லிக்கட்டுக் காளை போல இருந்த விஜயராஜை, ‘நீ ரஜினியைப் போன்று இருக்கிறாய். சினிமாவில் நடிக்கலாமே!; என தூபம் போட்டார்கள் நண்பர்கள்! இது அவரின் சினிமா ஆசைக்கான தூண்டுகோலாக அமைந்தது.

publive-image சினிமா, அரசியல் என இரு துறையிலும் வெற்றி பெற்றவர் என்கிற வகையில் விஜயகாந்த், தமிழக வரலாற்றில் தவிர்க்க இயலாதவர்.

ஒருமுறை மதுரை சங்கம் ஹோட்டலில் ஷூட்டிங்கிற்காக வந்து தங்கிய ரஜினியை தனது நண்பர்கள் புடைசூழ ஒரு ரசிகராக சந்திக்கச்சென்றார் விஜயராஜ். அங்கு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் திளைத்திருந்த ரஜினியை பார்த்தவுடன், இவரது மனதிற்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. அப்போதுதான், ‘ரஜினியைப் போல் ஆவேன்’ என்கிற லட்சியத்தை தன்னுள் வரித்துக் கொண்டார். அதற்காகவே விஜயராஜ் என்கிற தனது பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டு, சினிமா வாய்ப்புகளைத் தேட தன் நண்பன் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னைக்குப் புறப்பட்டார்.

சினிமா வாய்ப்பு தேடுகிறவர்கள், எதையும் தாங்கக்கூடிய இதயம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒரு விதி. விஜயகாந்த் செல்வச் செழிப்பில் வளர்ந்த பிள்ளை! எனினும் பசி- பட்டினி மட்டுமல்ல, அவமானங்களையும் வேதனைகளையும் தாங்கக்கூடிய தன்மை அவரிடம் இருந்தது.

வாரிசு அடிப்படையிலோ, வசதி அடிப்படையிலோ அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. தவிர, கதாநாயகர்களுக்கான கூடுதல் தகுதியாக கருதப்பட்ட சிவந்த நிறமும் அவரிடம் இல்லை. இந்த நிறம் என்கிற மாயையை உடைத்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே! அவரது வெற்றியே விஜயகாந்துக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

publive-image விஜய்காந்த் அரசியலுக்கு வரும் முன்பாகவே சென்னையில் அவரது அலுவலகம், பலருக்கும் பசி தீர்க்கும் அமுதசுரபியாக இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கடுமையான போராட்டங்களுக்கு இடையில் தூரத்து இடி முழக்கம், இனிக்கும் இளமை ஆகிய படங்கள் விஜயகாந்துக்கு கிடைத்தன. எனினும் முன்னணி நடிகர் என்கிற வட்டத்திற்குள் உடனடியாக நுழைய முடியவில்லை. அன்றைய புதுமுக இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான் விஜயகாந்த் என்கிற ஒரு நடிகரை பிரபல நடிகர் என்கிற பட்டியலில் இணைத்த முதல் படம்.

தொடர்ந்து ஆட்டோராஜா, சிவப்பு ஈட்டி, ஜனவரி 1 போன்ற படங்கள் சரியாகப் போகவில்லை. மீண்டும் வெற்றிக்கு காத்திருந்த விஜயகாந்திற்கு கைகொடுத்தது சந்திர சேகரனே! அதன்பிறகு வசந்தராகம் போன்ற படங்கள் சுமாராக ஓடின. நானேராஜா நானேமந்திரி போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விஜயகாந்துக்கு என்று ஒரு தனி இமேஜ் கொடுத்த படமாக இன்றளவும் இருக்கின்றது.

1979-ல் சினிமாவுக்கு வந்த விஜயகாந்த் எண்பதுகளின் மத்தியில் வரை வணிகரீதியான பெரிய நடிகர்கள் பட்டியலில் இல்லை. விஜயகாந்த் கதாநாயகனாக பயணித்தாலும், பல படங்களில் இரண்டு மூன்று கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததும் அவரது திரைப் பயணத்தைத் தொடர வாய்ப்பாக அமைந்தது.

1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை! அதை உருவாக்கியது, அம்மன் கோவில் கிழக்காலே படம்தான்! இதற்கு முன்பே வைதேகி காத்திருந்தாள் வெற்றியடைந்திருந்தது. எனினும் விஜயகாந்த் என்கிற ஒரு நடிகருக்கான ரசிகர் வட்டமோ, வியாபார எல்லையோ வராத காலகட்டம் அது. அதன் பின்னர் தழுவாத கைகள், வெள்ளைப்புறா ஒன்று, அன்னைபூமி என்று தடுமாறிக் கொண்டிருந்த நிலையில்தான் அம்மன் கோவில் கிழக்காலே வந்தது. விஜயகாந்துக்கு தனியாக ரசிகர்கள் வட்டத்தை முதலில் அமைத்துக் கொடுத்த படம் இதுவே!

publive-image தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசியல் கட்சியை ஆரம்பித்தார். எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆனார்.

தொடர்ந்து, எந்த ரஜினியை ரோல்மாடலாக கருதிக்கொண்டு சினிமாவில் நுழைந்தாரோ... அதே ரஜினிகாந்திற்கு போட்டியாக நிற்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டார் . ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் பல்வேறு போட்டியாளர்களை அவ்வப்போது இடையிடையே அவர் சந்தித்தாலும் கூட... கமல், பாக்யராஜ், மோகன், டி.ராஜேந்தர், ராமராஜன் போன்றவர்களை சந்தித்தாலும் கூட... கடந்த 40 வருடங்களில் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் விஜயகாந்த் மட்டுமே ரஜினிகாந்திற்கு தொடர்ந்து போட்டியைக் கொடுத்த நடிகர். அவர் அளவுக்கு ரஜினிகாந்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியவர் இன்றளவும் வேறு யாரும் இல்லை. விஜயகாந்தின் திரை சாதனைக்கு இதுவே மகுடம்.

1986 முதல் 93 வரை 7 ஆண்டுகள் விஜயகாந்தின் படங்கள் ரஜினிகாந்தின் வியாபாரத்தில் 80 சதவீதத்தை எட்டின. இது வேறு எந்த நடிகரும் செய்யாத ஒரு சாதனை. விஜயகாந்தின் திரை வெற்றி என்பது எம்ஜிஆருக்கு சமமானது என்பதை ஆய்வுகள் மூலம் அறியலாம். ரஜினி ஏபிசி, சிவாஜி ஏ அண்ட் பி, கமல் ஏ சென்டர்சில நேரங்களில்! ரஜினிக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் விஜயகாந்தும் மட்டுமே பி அண்ட் சி சென்டர்களில் அதிக வெற்றிகளை கொடுத்த நடிகர்கள்.

ரஜினிக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அதிக திரை வெற்றிகளைக் கொடுத்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு இணையாக வெற்றிகளை கொடுத்தவர் விஜயகாந்த். கிராமங்களில் ரஜினிகாந்த் அளவிற்கு விஜயகாந்திற்கு ரசிகர்கள் இல்லை என்றாலும் கூட... பல இடங்களில் ரஜினிக்கு இணையாக, சில இடங்களில் ரஜினியை விட கூடுதலாக செல்வாக்கு இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

publive-image கமல், பாக்யராஜ், மோகன், டி.ராஜேந்தர், ராமராஜன் போன்றவர்களை போட்டியாளர்களாக ரஜினி சந்தித்தாலும் கூட... கடந்த 40 வருடங்களில் விஜயகாந்த் மட்டுமே ரஜினிகாந்திற்கு தொடர்ந்து போட்டியைக் கொடுத்த நடிகர்.

அம்மன் கோவில் கிழக்காலேவில் தொடங்கிய வெற்றி பூந்தோட்ட காவல்காரன், உழவன் மகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என்று தொடர்ந்தது. எண்பதுகளின் இறுதியில் கலைஞரால் புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், 90களின் ஆரம்பத்தில் தனது ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். எம்ஜிஆரை விட சினிமாவில் செல்வாக்கு அதிகமாக பெற்றிருந்த ரஜினிகாந்தின் அரசியல் வருகை அவ்வப்போது எதிர்பார்க்கப்பட்டது. விஜயகாந்தின் அரசியல் வருகை பரபரப்பாக எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் கூட முக்கியத்துவம் வாய்ந்த நபராக விஜயகாந்த அறியப்பட்டார்.

எம்ஜிஆரை போன்றே நடிகர் சங்கத்தின் தலைவராக ஆனார். எம்ஜிஆருக்கு எப்படி திரை உலகில் செல்வாக்கு குறையத் தொடங்கியது என்கிற விமர்சனம் எழுந்தபோது அரசியல் கட்சி ஆரம்பித்தாரோ அதே பாணியில்தான் விஜயகாந்தும் வந்தார். ரஜினிக்கு முன்னதாக அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசியல் கட்சியை ஆரம்பித்தார். எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆனார்.

விஜய்காந்த் அரசியலுக்கு வரும் முன்பாகவே சென்னையில் அவரது அலுவலகம், பலருக்கும் பசி தீர்க்கும் அமுதசுரபியாக இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சினிமா வாய்ப்பு தேடி கோடம்பாக்கம் வீதிகளில் சுற்றிய பலர் இதற்காகவே விஜயகாந்துக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். விஜயகாந்தின் உதவும் குணத்திற்கு அது ஒரு எடுத்துக்காட்டும்கூட!

ஒரு சாதாரண கிராமத்து இளைஞராக இருந்து எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சினிமாவிலும், அரசியலும் வளர்ந்த விஜயகாந்தின் சாதனை மெச்சத் தகுந்தது.

திராவிட ஜீவா

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Rajinikanth Mgr Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment