/indian-express-tamil/media/media_files/2025/08/27/mansoor-ali-khan-2025-08-27-16-34-57.jpg)
படத்தில் ரம்யா கிருஷ்ணன், நிஜத்தில் பிரேமலதா; கேப்டன் பிரபாகரன் க்ளைமாக்ஸில் அப்பா ஆன விஜயகாந்த்: 35 வருட உண்மை சொன்ன மன்சூர்!
1990ம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அத்திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்ற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு, வில்லன் கேரட்டரை வடிவமைத்திருந்தார் செல்வமணி. அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது.
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில், 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். விஜயகாந்தின் நீண்ட் நாள் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் உருவான 'கேப்டன் பிரபாகரன்' 1991ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மன்சூர் அலிகான் வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இது. அவருக்கும் இப்படம் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது.
ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான குதிரைகள் என மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை காட்சி, கவுரவ வேடத்தில் சரத்குமார், முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், இளையராஜாவின் இசை, ஆட்டமா தேரோட்டமா பாடல் என இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் பாராட்டைப் பெற்றது.
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்த சுவாரசியமான தகவலை 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மன்சூர் அலிகான் பகிர்ந்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரம்யா கிருஷ்ணன் பிரசவத்தில் இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருந்தது. அப்போது, அதே நேரத்தில் நிஜ வாழ்வில் நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தத் தகவலைக் குறிப்பிடும் மன்சூர் அலிகான், "படத்தின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கிற்காக இரவு 12 மணிக்கு இயக்குநர் சாரதா ஸ்டூடியோவுக்கு வந்தார். 7வது நாள் ஷூட்டிங்கில், க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படும்போது, விஜயகாந்த் நிஜ வாழ்வில் அப்பா ஆனார். அதாவது, அவரது மகன் பிரபாகரன் பிறந்தார். படத்தில் ரம்யா கிருஷ்ணனின் குழந்தை பிறப்பதும், நிஜத்தில் பிரேமலதாவுக்குக் குழந்தை பிறப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கேரவன், மொபைல் போன் போன்ற வசதிகள் எதுவும் இல்லை. ஆனால், விஜயகாந்த் ஷூட்டிங் முடிந்த பிறகும் சண்டை பயிற்சியாளர்களுடன் பேசி, அவர்களை தன் குடும்பத்தினர் போல நடத்துவார் என்று மன்சூர் அலிகான் கூறி உள்ளார். தென்னிந்திய சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோருக்குப் பிறகு, சண்டைக் காட்சிகளில் விஜயகாந்துக்கு இணையாக யாரும் வர முடியாது என்று கூறினார் மன்சூர் அலிகான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.