ஒரே போட்டோ… ஓஹோன்னு உச்சம்… யார் இந்த அபர்ணா தாஸ்?

Vijay’s Beast movie actress Aparna Das photo goes viral: ஒரே புகைப்படம் மூலம் பிரபலமான ’பீஸ்ட்’ பட நடிகை; யார் இந்த அபர்ணா தாஸ்?

பீஸ்ட் திரைப்படத்தின் 100 ஆவது படப்பிடிப்பு நிறைவையொட்டி வெளியான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள அபர்ணா தாஸ் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. டாக்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பீஸ்ட் படத்தின் 100 ஆவது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் திலீப்குமார், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் இடம்பெற்றிருந்தினர்.  

மேலும், அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் ஸ்டைலாக ‘டிரம்ஸ்’ வாசித்து கொண்டு இருக்க, நடிகை பூஜா ஹெக்டே பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார். மற்ற நடிகர்களும் இசை வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் நெல்சனும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் ‘ஸ்டைலிஷ் லுக்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

இதனிடையே அந்தப் புகைப்படத்தில் விஜய்க்கு அடுத்தப்படியாக அதிகம் கவனம் ஈர்த்தது கீ போர்டு வாசித்துக்கொண்டிருந்த பெண் புகைப்படம்தான். ஸ்டைலிஷ் லுக்கில் இருந்த அந்தப் பெண்ணை நடிகர் ரெடின் கிங்ஸ்லி பார்த்துக் கொண்டிருப்பார்.

உடனே அந்தப் பெண் யார் என நெட்டிசன்கள் தேடி வந்தனர். அவர் பெயர் அபர்ணா தாஸ். 25 வயதான அபர்ணா கேரளாவைச் சேர்ந்தவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மாரா பகுதியைச் சேர்ந்த. இவரின் குடும்பம் மஸ்கட்டில் செட்டில் ஆகியுள்ளது. இருப்பினும் அபர்ணா, நென்மாரா பகுதியில் பள்ளிப் படிப்பையும், உயர் கல்வியை மஸ்கட்டிலும் முடித்துள்ளார். மேலும், கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்திருக்கிறார்.

அபர்ணா கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்த வந்தார். திரைத்துறையில் அபர்ணாவுக்கு முதல் பட வாய்ப்பு 2019 இல் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவந்த ‘ஞான் பிரகாஷன்’ படத்தில் கிடைத்தது. பின்னர் அதே ஆண்டு வெளியான ‘மனோகரம்’ படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அபர்ணா. தற்போது, ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற இரண்டு படங்களில் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அபர்ணா, ‘பீஸ்ட்’ படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார். ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, ஒற்றைப் புகைப்படம் மூலமாக படம் வெளியாகும் முன்பே அபர்ணா தாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijays beast movie actress aparna das photo goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com