வன்முறையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களின் வாழ்கையை அந்த வன்முறை எப்படிப் பாதிக்கும் என்பதுதான் கதை. வன்முறையை விட்டு விலகுவது என்று முடிவெடுத்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதும் சொல்லப்படுகிறது.
திருச்சியில் ஊரே நடுங்கும் பெரிய தாதா சமுத்திரம் (சரத் லோகிதஸ்வா). அவருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் சமுத்திரத்தின் வளர்ச்சியைக் கண்டு எரிச்சலடைந்து அவரைத் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்கிறார். சமுத்திரத்தின் வலது கையான ரவி சமுத்திரத்துக்குப் பின் அந்தக் குழுவின் பொறுப்பை ஏற்கிறார். ரவியின் வலது கை குணா (விக்ரம் பிரபு).
சமுத்திரத்தின் மகள் நிரஞ்சனாவுக்கு (மஞ்சிமா மோகன்) சில இளைஞர்களால் சாலையில் தொல்லை ஏற்பட, குணா பாதுகாப்புக்காக அனுப்பப்படுகிறான். அவர்கள் இருவருக்குமிடையே காதல் முளைக்கிறது. அந்தக் காதலும் நிரஞ்சனாவின் போதனைகளும் குணாவின் மனதை ரவுடித்தனத்திலிருந்து விலகச் செய்கின்றன.
ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை. எதிரிக் குழுவினர் அவனைக் கொல்லத் துடிக்கிறார்கள். நிரஞ்சனாவின் அம்மா அவள் காதலை ஏற்கவில்லை. இந்தக் காதலால் தன் ஆசான் ரவியின் பகையையும் குணா சம்பாதித்துக்கொள்கிறான்.
இத்தனை பிரச்சினைகளையும் குணா எப்படிச் சமாளிக்கிறான் என்பதே கதை.
வன்முறையைத் தவிர்த்தலே படத்தின் ஆதாரமான செய்தி. இதை மையமாகக் கொண்ட பல படங்கள் வன்முறையின் மடியிலேயே தஞ்சம் அடைந்திருக்கின்றன. ஆனால், இயக்குநர் பிரபாகரன், வன்முறை தவிர்த்த வாழ்க்கை சாத்தியம் என்பதாகக் காட்டி வித்தியாசப்படுகிறார். விக்ரமுக்கும் மஞ்சிமாவுக்கும் இடையிலான காதலை மென்மையாகச் சித்தரித்துள்ளார். சண்டைக் காட்சிகள் நன்றாக உள்ளன. வசனங்கள் கவனிக்கவைக்கின்றன. குறிப்பாக நிரஞ்சனாவின் அம்மாவும் விக்ரமும் பேசும் இடம். விக்ரமுக்கு உதவும் டாக்டர், எதிரிக் குழுவில் இருக்கும் விக்ரமின் நண்பன் எனச் சில கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.
தாதாக்கள் குறித்த கதையிலும் அதைச் சொல்லும் திரைக்கதையிலும் புதுமை எதுவும் இல்லை என்பதுதான் படத்தின் பெரிய குறை. காட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்பார்த்தபடியே நகருகின்றன. எந்தத் திருப்பமும் வியப்பை அளிக்கவில்லை. வேகமும் இல்லை. விக்ரம் மஞ்சிமாவுக்குக் காவலனாக வரும் காட்சிகள் ஒரே விதமாக இருக்கின்றன. குழுக்களுக்கிடையிலான விரோதமும் நன்கு சித்தரிக்கப்படவில்லை.
விக்ரம் பிரபுவின் நடிப்பில் புதிதாக ஏதுமில்லை. ஏற்கெனவே பல படங்களில் தான் வெளிப்படுத்திய பார்த்த அதே முகபாவங்கள், உடல் மொழி என வளைய வருகிறார். காதலியின் அம்மாவோடு பேசும் இடம் மட்டும் தனித்து நிற்கிறது. சண்டைக் காட்சிகளில் வழக்கமான துடிப்பு.
மஞ்சிமா மோகனின் தோற்றப் பொலிவு திரைக்கு அழகு சேர்க்கிறது. கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். அதிக வேலை இல்லை என்பது அவர் குற்றம் அல்ல.
அருள்தாஸ், சரத் லோகிதஸ்வா, போஸ்டர் நந்தகுமார், ஆர்.கே. விஜய முருகன் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பலம்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சில காட்சிகளில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு இசையின் ஆதிக்கம் அதிகம்.
தாதாக்களைப் பற்றிப் பல கதைகள் வந்தாலும் ஒரு குழுவே திருந்துவது குறித்த படம் என்னும் வகையில் வித்தியாசமாகவே இயக்குநர் சிந்திக்கிறார். ஆனால், தான் சொல்ல வந்த விஷயத்துக்கு அழுத்தமான காட்சிகளுடன் கூடிய விறுவிறுப்பான திரக்கதையை அமைக்கத் தவறியிருக்கிறார். இதுவே படத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
மதிப்பு: 2.5