ஆதவன்
எது சரி, எது தவறு? யார் நல்லவர், யார் கெட்டவர்? சட்ட விரோதமான குற்றங்களையே வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் எல்லாம் கெட்டவர்களா? அவர்களை ஒடுக்குவதற்காக வேலை செய்யும் காவல் துறையினர் நல்லவர்களா? நன்மைக்கும் தீமைக்கும் இடையில் தவறுக்கும் சரிக்கும் இடையில் தர்மம் என ஏதாவது ஒன்று இருக்கிறதா? குற்றம் செய்பவர்களுக்கும் தர்மம் உண்டா?
‘ஓரம் போ’ என்னும் வித்தியாசமான படத்தைத் தந்த புஷ்கர் – காய்த்ரி இணையினர் இயக்கியுள்ள ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இதுபோன்ற பல கேள்விகளை எழுப்புகிறது. வலுவான பாத்திரங்களும் விறுவிறுப்பான திருப்பங்களும் கொண்ட திரைக்கதையின் மூலம் இதற்கு விடைகாண முயல்கிறது.
விக்ரம் (மாதவன்) நேர்மையான காவல் துறை அதிகாரி. சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுக் குற்றவியல் சாம்ராஜ்யத்தை நடத்திக்கொண்டிருக்கும் பெரிய தாதாக்களை ‘மாற்று’ வழியில் தீர்த்துக்கட்டுவதில் தவறில்லை என நினைப்பவன்.
16 கொலைகள் செய்துவிட்டுத் தலைமறைவாக இருக்கும் வேதா (விஜய் சேதுபதி) என்ற தாதாவைப் பிடிப்பதற்காக விக்ரம் தலைமையில் தனிப்படைக்கு அமைக்கப்படுகிறது. அந்தப் படையினர் வேதாவின் அடியாட்கள் சிலரைக் கொன்றதையொட்டி வேதா வெளியில் வருகிறான். அவன் பழிவாங்குவான் என எதிர்பார்த்து போலீஸ் உஷாராகிறது. அவனோ சரணடைகிறான். விசாரணையின்போது அவன் சொல்லும் ஒரு கதை விக்ரமின் மனதை அசைக்கிறது. குற்றவியல் உலகம் பற்றி மேலும் ஆராய அவனைத் தூண்டுகிறது.
வேதா சொல்லும் கதைகள் விக்ரமின் நகர்வுகளைப் பாதிக்கின்றன. இதற்கிடையில் விக்ரமின் வக்கீல் மனைவி (ஷ்ரத்தா சாய்நாத்) வேதாவின் சார்பில் சட்டபூர்வமாகக் களத்தில் இறங்குகிறாள். வேதாவின் கதைகளாலும் அடுத்தடுத்த சம்பவங்களாலும் பெரும் அதிர்ச்சிகளுக்கு உள்ளாகும் விக்ரம் என்ன செய்கிறான், வேதாவின் நிலை என்ன என்பதுதான் மீதிக் கதை.
சட்டத்திடமிருந்து எளிதில் தப்பித்துவிடும் குற்றவாளிவாளிகளைக் கொல்லத் துடிக்கும் காவல் துறை அதிகாரி, குற்றங்களில் ஊறிய ஒரு தாதாவின் வாழ்க்கைப் போராட்டங்கள் ஆகிய இரண்டையும் இணைத்து விறுவிறுப்பாகக் கதை சொல்லியிருக்கிறார்கள் புஷ்கர் காயத்ரி இணையினர். ஒவ்வொரு தரப்பின் நியாயமும் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. பாத்திர வார்ப்புகள் வலுவாக இருக்கின்றன. திருப்பங்கள் பெரிதும் நம்பகமாக இருக்கின்றன. மோதல், துரத்தல், கொலைகள் ஆகியவற்றுக்கிடையே காதல், பாசம் போன்ற தனிப்பட்ட உணர்வுகளுக்கும் அழுத்தமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விக்ரமாதித்யனிடம் பிடிபடும் வேதாளம் அவனிடம் கதை சொல்லித் தப்பித்துக்கொள்ளும் மரபுவழிக் கதையை நவீன காலத்தில் அழகாகப் பொருத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.
வேதா சொல்லும் கதைகள் விக்ரமின் கண்ணோட்டத்தை மாற்றும் விதமும் நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளியைக் கொல்வதிலேயே குறியாக இருக்கும் விக்ரம், வேதா சொல்லும் கதைகளை ஏன் கேட்க வேண்டும் என்பதை முறையாக நிறுவவில்லை. விசாரணையின்போது சொல்லும் கதையைக் கேட்பதில் இருக்கும் தர்க்கம் அடுத்தடுத்த கதைகளைக் கேட்பதில் இல்லை. துப்பாக்கி முனையில் கதை சொல்பவன் நல்லிக் கறியைச் சாப்பிடும் முறை உள்பட சின்னச் சின்ன நுணுக்கங்களையெல்லாம் சேர்த்துச் சொல்வதும் நம்பும்படி இல்லை. ஆனால், ஒவ்வொரு கதை முடியும்போதும் எழுப்பப்படும் கேள்விகள் சுவாரஸ்யமானவை. படத்தின் வேகத்தைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் தொய்வு விழுகிறது.
குற்றவியல் பின்னணி கொண்ட இந்தக் கதையில் உணர்ச்சிகளுக்கும் உரிய இடம் உள்ளது. விஜய் சேதுபதிக்கும் கதிருக்கும் இடையிலான பாசம், மாதவனுக்கும் ஷ்ரத்தாவுக்கும் இடையிலான உறவு ஆகியவை அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. காட்சிகளில் வெளிப்படும் அழகுணர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. பெரும் நெருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் வேதா, திடிரென்று மழை பெய்யும்போது ஒரு நிமிடம் மழையில் நின்று ஆசைதீர நனைந்துவிட்டுச் செல்வான். இதுபோன்ற தருணங்கள் படத்தை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன.
மாதவன், விஜய் சேதுபதி இருவருக்குமே சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் நேர் முரணான பின்னணி கொண்ட பாத்திரங்கள். இருவரும் தத்தமது பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் யார் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு இருவரும் ஏற்றுக்கொண்ட வேடத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். யதார்த்தமான உணர்ச்சிகள், பொருத்தமான உடல் மொழி, அவரவர் குணத்துக்கும் பின்னணிக்கும் ஏற்ற பேச்சு என்று இருவருமே பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
ஷ்ரத்தா சாய்நாத், கதிர் இருவரும் கதைக்கு உறுதுனையாக இருக்கிறார்கள். வரலட்சுமியின் பாத்திரத்தோடு அவர் தோற்றம் பொருந்தவில்லை. பிரேம், ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பு மனதில் நிற்கிறது.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை மிகவும் பொருத்தம். பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு படத்தின் தொனிக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது. ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு கதைக்குக் கச்சிதமான திரை வடிவம் தருகிறது.
வசனங்கள் படத்துக்குப் பெரிய பலம். எது சரி, யார் நல்லவர் என்பது குறித்த கேள்விகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் எழும் குழப்பங்களையும் வசனங்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
காவல்துறை, குற்றவியல் உலகம் ஆகிய இரு தரப்புகளின் நியாயங்களையும் அவர்களுடைய வேறு முகங்களையும் பதிவு செய்கிறது படம். போலி மோதல் கொலைகளுக்கான காவல் துறையினரின் கண்ணோட்டத்தைப் பதிவுசெய்யும் படம், அதன் மறு பக்கத்தையும் தவறாமல் சொல்கிறது.
எது சரி, யார் சரி, ஒரு தவறை இன்னொரு தவறால் சரிக்கட்டிவிட முடியுமா, நியாயத்தின் பேரால் அத்துமீறும் காவலர்கள் தார்மிக அடிப்படையில்தான் அவ்வாறு செய்கிறார்களா ஆகிய கேள்விகளை வலுவாக எழுப்புகிறது இந்தப் படம். இதனாலேயே அண்மையில் வந்த படங்களில் முக்கியமான படமாக இதைச் சொல்ல வேண்டும்.
மதிப்பு: 3.5 / 5
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.