படத்தயாரிப்பு செயல்முறையின்போது தனக்கு கடினமான விஷயம் இதுதான் என நடிகை மாளவிகா மோகனன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கோல்ட்ராகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் பணிகளை கவனிக்க எடிட்டிங் பொறுப்புகளை ஆர்.கே. செல்வா ஏற்றுள்ளார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 118 நாட்களில் நிறைவடைந்துள்ளது, மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டதால், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தங்கலான்' படத்தின் டப்பிங் பணியை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாளவிகா, "எனக்கு படத் தயாரிப்பு செயல்முறையின் பயங்கரமான பகுதி டப்பிங் தான். நான் டப்பிங் செய்யும் போது தயவு செய்து யாராவது வந்து எனது கையைப் பிடித்துக் கொள்ள முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“