டார்ஜிலிங்கில் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்த வில்லா ஒன்றில் தங்கியிருந்தார். ரஜினிகாந்த் தங்கியிருந்த ஒரே காரணத்திற்காக அந்த வில்லாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான காலா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங்கில் நடைப்பெற்று வருகிறது.
இதற்காக ரஜினிகாந்த் கர்சியாங்கில் உள்ள அலிட்டா ஹோட்டல் & ரிசார்ட்ஸ்-ன் பங்களாவில் 10 நாட்கள் தங்கி இருந்தார். இந்த பங்களாவின் உரிமையாளர்கள் தீவிர ரஜினி ஃபேன்ஸாம். தினமும் ரஜினியை பார்ப்பதற்காகவே அவர் ஷுட்டிங் புறப்படும் நேரத்தில் பங்களாவிற்கு வந்து செல்வார்களாம்.
இந்நிலையில் பங்களாவின் உரிமையாளர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு செயலை செய்துள்ளனர். ரஜினிகாந்த் தங்கி இருந்த பங்களாவுக்கு ‘ ரஜினிகாந்த் வில்லா # 3’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த பெயரை பலகையில் அச்சடித்து அதை ரஜினியிடம் கொடுத்து ஆசி பெற்றுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதே போல், டார்ஜிலிங்கில் உள்ள டீக்கடை ஒன்றில் ரஜினிகாந்த் அடிக்கடி டீ குடிப்பாராம். அந்த கடையில் போடும் டீ ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனதால் தினமும் அங்கிருந்து ஸ்பெஷல் டீ ரஜினிக்கு வந்து விடுமாம். அதனால் அந்த டீக்கடைக்கும் ‘தலைவா ஸ்பெஷல்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதுக் குறித்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ள அலிட்டா ஹோட்டல் & ரிசார்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் மெகுல் பரேக், “ரஜினி சாரை நேரில் பார்த்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு சிறந்த மனிதர் எங்கள் ரிசார்ட்ஸ்-ல் தங்குவதற்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டுள்ளோம். வில்லாவின் பெயரை ‘ ரஜினிகாந்த் வில்லா # 3’ மாற்றியது எங்கள் அன்பையும் மரியாதையையும் அவருக்கு காட்டுவதற்கு ஒரு சிறிய பங்களிப்பு தான்” என்று கூறியுள்ளனர்.