பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் கொட்டுக்காளி படத்தின் விமர்சனம்.
கதைக்களம்
நாயகியான மீனா (அன்னா பென்) கல்லூரியில் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலிக்கிறார். சிறுவயதிலிருந்தே மீனாவை திருமணம் செய்துகொள்ள துடிக்கிறார் அவரின் உறவினரான பாண்டி (சூரி). மீனாவின் காதல் விவகாரம் குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் மீனாவை ஒரு சாமியாரிடம் அழைத்து சென்று அவரை சரி செய்து திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஒரு ஆட்டோவில் மீனா, அவரின் பெற்றோர், பாண்டி, அவரது இரு சகோதரிகள், அப்பா, நண்பர்கள், ஒரு சிறுவன், சேவல் என அனைவரும் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளே படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு
படத்திற்கு படம் சூரியின் நடிப்பு நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டே செல்கிறது. ஆண் என்கிற கர்வத்தை சுமந்துகொண்டு ஒரு கட்டத்தில் சூரி அன்னா பென் மீது கோவப்பட்டு அடிக்கும் காட்சிகள் எல்லாம் தரமான சம்பவம். படம் முழுவதும் முறுக்கிய உடலுமாக, இறுக்கமான முகமும் கொண்டு நடப்பில் அதிகளப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் வரும் நாயகியான அன்னா பென்னுக்கு ஓரிரண்டு வசனங்கள் தான் என்றாலும் கோவம், ஏக்கம், விரக்தி என அனைத்தையும் தம் உடல்மொழியில் வெளிப்படுத்தி நடிப்பில் ஜொலிக்கிறார். துணை நடிகர்கள் அனைவருமே யதார்த்த நடிப்பை அழகாய் வழங்கியுள்ளனர்.
இயக்கம்
`கூழாங்கல்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜின் அடுத்த யதார்த்த படைப்பாக வெளிவந்துள்ளது "கொட்டுக்காளி". படத்தில் வரும் வசனங்கள் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் எதிர்ப்பு குரலாய் ஒலிக்கிறது.
படம் பற்றிய அலசல்
ஆரம்ப காட்சியிலேயே இது ஒரு வித்தியாசமான படம் என்பதை ரசிகர்களுக்கு கடத்திவிடுகிறார்கள். கதை மெதுவாக நகர்ந்தாலும் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சுவாரசியமான உரையாடல்களில் நம்மை கவர்கிறது. குறிப்பாக முதல் பாதியில் ஆட்டோவில் வரும் சிறுவன் சண்டைகளுக்கு மத்தியில் வண்டியில் ஹாரன் அடிப்பதும், பரபரப்பான சூழலின் இருவர் மட்டும் மதுக்கடைக்கு வழி கேட்பதும் போன்ற சில காட்சிகளின் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கிறது.
இடைவேளைக்கு முன்னர் வரும் காட்சிகள் பரபரப்பின் உச்சம். சேவலையும், அண்ணா பென்ணையும் இணைத்து சொல்லப்படும் உவமைக் காட்சிகள் பல பெண்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்துகிறது. பெண்கள் மீதான அடக்குமுறை, மூட நம்பிக்கை, சாதியம் பிரச்சனைகள், ஆண் ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைத்திருக்கும் விதம் சிறப்பு. கிளைமாக்ஸ் காட்சிகள் சிலருக்கு ஏற்புடையதாகவும், சிலருக்கு மாற்று கருத்து ஏற்படுத்துவதாகவும் அமைகிறது.
படத்தின் பிளஸ்
⦿ சூரி மற்றும் அன்னா பென்னின் நடிப்பு
⦿ ரம்மியமான ஒளிப்பதிவு
⦿ டெக்னிக்கல் விஷயங்கள்
⦿ வசனங்கள்
படத்தின் மைனஸ் :
⦿ பெரிதாக எதுவும் இல்லை
மொத்தத்தில், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடக்கூடிய தரமான படமாக முடிகிறது இந்த கொட்டுக்காளி
செய்தி: நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.