Happy Birthday Virat Kohli: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் அவரது கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோஹ்லி ஆகியோர் பூட்டானில் விடுமுறையை கழித்து வருகிறார்கள். அங்கு "உண்மையான, எளிய, தூய அன்பை" தாங்கள் கண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.
மனித மாண்பை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தை தினமும் நம்மால் கேள்விப்பட முடியாது. ஆனால் அனுஷ்காவின் கதை, நம் இதயத்தில் அன்பையும் பெருமிதத்தையும் நிரப்புகிறது. தனது கணவர் விராட் கோலியுடன் 8.5 கி.மீ தூரம் டிரெக்கிங் சென்றிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. மலையின் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டியைப் பார்த்ததும் நின்றிருக்கிறார். அவர்கள் கன்றுக்குட்டிக்கு உணவளித்ததைப் பார்த்ததும், அதன் உரிமையாளர்கள் தேநீர் அருந்த அனுஷ்காவையும், விராட்டையும் அழைத்திருக்கிறார்கள். அனுஷ்கா மற்றும் விராட் இருவருக்கும் அந்தக் குடும்பத்தினர் விருந்தோம்பல் அளித்துள்ளனர்.
அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, ”சோர்வாக இருக்கும் இரண்டு மலையேறுபவர்களுக்கு தங்களால் முடிந்ததை செய்ய விரும்பியது அந்தக் குடும்பம். அந்த இருவரும் பிரபலங்கள் என்பதை அறியாமலும், பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் இருந்ததும், மனதுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, ”விராட்டையும் என்னையும் மிக நெருக்கமாக அறிந்த அனைவருமே, நாங்கள் உண்மையான, எளிமையான மற்றும் தூய்மையான மனித தொடர்பு கொண்ட தருணங்களுக்காக வாழ்கிறோம் என்பதை அறிவார்கள்” எனவும் கூறியிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.