கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா தயாரித்து வெப் சீரிஸ் அரசியல் விமர்சனங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கோலி தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், அதிரடி ஆட்டக்காரர் என கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருபவர் விராட் கோலி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா அண்மையில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அனுஷ்கா சர்மா, ‘பாதாள் லோக்’ என்ற வெப் சீரிஸைத் தயாரித்தார். இந்த வெப் சீரீஸை இயக்குனர் அவினாஷ் அருண், புரோசித் ராய் இயக்கி உள்ளனர்.
அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள ‘பாதாள் லோக்’ வெப் சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸ் இந்துத்துவ அரசியல், சாதிய ஏற்றத்தாழ்வு, காவல்துறையின் செயல்பாடு, ஊடகங்களின் அரசியல் பலவற்றை கேள்விக்குட்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் காட்சிகள் அனைத்தும் அப்படியே தற்கால அரசியல் சூழலுக்கு பொருந்திப்போவதாக உள்ளதால் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு இப்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் ‘பாதாள் லோக்’ தொடரில், உத்தரப் பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ஒருவர் சாலைகளை திறந்து வைக்கும் புகைப்படம் ஒன்று செய்தித்தாளில் வெளியாகி இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தில் பின்னால் இருப்பவர்களில் உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ நந்திகிஷோர் குர்ஜார் ஒருவரும் ஆவார்.
ஏற்கெனவே இன்றைய அரசியல் சூழலை விமர்சிப்பது போல உள்ளதாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த படத்தில் பாஜக எம்.எல்.ஏ-வின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
பாஜக எம்.எல்.ஏ. நந்திகிஷோர் ஒரு புகைப்படத்தில் உண்மையிலேயே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு சாலையை திறந்துவைக்கும்போது, பின்னால், நின்றுகொண்டிருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ நந்திகிஷோர் ஷர்மா தனது அனுமதி இல்லாமல் வெப் சீரிஸில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தொடரின் தயாரிப்பாளர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதோடு, இந்த தொடரில் குர்ஜார் இன மக்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் கூறிய பாஜக எம்.எல்.ஏ நந்திகிஷோர், “விராட் கோலி ஒரு தேசபக்தர். அவர் தேசத்திற்காக விளையாடி வருகிறார். எனவே அவர் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அனுஷ்கா சர்மா தயாரித்த வெப் சீரீஸில் இடம் பெற்றுள்ள அரசியல் விமர்சனம் மற்றும் நந்திகிஷோரின் புகைப்படத்துகாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ. நந்திகிஷோர் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என அறிவுரை கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.