நடிகர் விஷால், திருமணம் பற்றிய செய்திகள் நெடிய மாரத்தானாக தமிழ் சினிமா உலகில் பேசப்பட்டு வந்தது. அதற்கு விடை சொல்லும் வகையில் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை அவர் மணப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
விஷால், தமிழ்ப் பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளராகவும் இவர் பதவி வகித்து வருகிறார்.
விஷால் திருமணம் குறித்து நீண்ட காலமாக தமிழ் சினிமா உலகில் பேசப்பட்டு வந்தது. பிரபல நடிகை ஒருவரை அவர் காதலித்ததாகவும் தகவல்கள் தொடர்ந்து வந்தன. எனினும் விஷால், ‘நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடித்த பிறகு அதில் முதல் திருமணமாக எனது திருமணம் நடைபெறும்’ என கூறி வந்தார்.
விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஆவார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் தொழில் அதிபர் ஒருவரின் மகளை விஷால் திருமணம் செய்ய இருப்பதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக விஷால் தொடர்ந்து மவுனம் காத்தார்.
இந்தச் சூழலில் விஷால் திருமணம் செய்யவிருக்கும் அனிஷா அல்லா ரெட்டி தனது திருமணத்தை உறுதி செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், புதிய சவால்களை எதிர்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அனிஷா அல்லா ரெட்டி வெளியிட்ட இந்தத் தகவலை விஷாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் உறுதி செய்திருக்கிறார். அதில் விஷால், ‘யெஸ், ஹேப்பி, டூ ஹேப்பி, ஹேப்பியெஸ்ட்’ என தனது மகிழ்ச்சியை தெரிவித்திருப்பதுடன், ‘அவரது பெயர் அனிஷா அல்லா. அவர், ‘யெஸ்’ சொல்லிவிட்டார். அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. என் வாழ்வின் முக்கிய மாற்றம் இது. தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி அமெரிக்காவில் படித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவர் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நன்றாக பாடுவார், நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும், புத்தகம் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். டிரெக்கிங் செல்பவர்.
விஷால், அனிஷா திருமணம் மார்ச் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. விஷால் ஏற்கனவே தெரிவித்தபடி நடிகர் சங்க கட்டடத்தில் தான் அவரின் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.