Vishal - Anisha Reddy Engagemet: கடந்த 2004-ல் வெளியான செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பூஜை, துப்பறிவாளன், இரும்புத்திரை, அயோக்யா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்
அதோடு நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த விஷாலுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்களை துளைத்து எடுத்தது. விஷாலின் நண்பர்கள் ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொள்ள, 41 வயதான விஷால் இன்னும் பேச்சிலராகவே இருக்கிறாரே என அனைவரும் கேட்கத் தொடங்கினர். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து விட்டு திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்திருந்தார் விஷால்.
அதோடு நடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வந்தார். பல பேட்டிகளில் திருமணம் குறித்த கேள்விக்கு, ‘நான் கட்டாயம் காதல் திருமணம் தான் செஞ்சுக்குவேன். அந்த லட்சுமிகரமான நடிகை’ என்ற ரீதியில் தான் பதில் அளித்து வந்தார். அதோடு கடந்த முறை நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் - விஷால் எதிரெதிராக நின்ற போது, அப்பாவா? காதலரா? என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளானார் வரலட்சுமி. இதனால் விஷால் - வரு இருவருக்குமிடையே சில மனஸ்தாபங்கள் இருந்த போதிலும், காதலை தொடர்ந்தனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படத்தில் வில்லியாக நடித்தார் வரு. எப்படியும் இவர்கள் இந்தாண்டு திருமணம் செய்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்க, வேறொருவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் விஷயத்தை அறிவித்தார் விஷால்.
கடந்த பிப்ரவரியில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகளும் தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவருமான அனுஷா ரெட்டியுடன் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ’அர்ஜுன் ரெட்டி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிஷா. அதோடு அமெரிக்காவில் பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அந்தப் படங்களையும் ஒருவரையொருவர் பாராட்டியும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார்கள் விஷால் அனிஷா ஜோடி. குறிப்பாக அனிஷாவை பார்த்ததுமே காதலில் விழுந்து விட்டதாக தெரிவித்திருந்தார் விஷால்.
இந்நிலையில் இவர்களுடைய திருமணத்தை வரும் அக்டோபரில் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். நாட்கள் நெருங்கும் வேளையில், இரு தரப்பினரும் திருமண ஏற்பாடுகளுக்கு தயாராகவில்லை. இதனிடையே விஷால் சம்பந்தமான அனைத்துப் படங்களையும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கி விட்டார் அனிஷா. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர அதன் காரணம் என்ன? குடும்பத்தினரிடையே ஏதேனும் பிரச்னையா? இல்லை திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.