Vishal and Anisha Alla Reddy Call Off Wedding: நடிகர் விஷால் மற்றும் நடிகை அனிஷா அல்லா ரெட்டி இருவருக்கும் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனிஷா அல்லா ரெட்டி விஷாலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், விஷால் – அனிஷா அல்லா ரெட்டி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அனிஷா மற்றும் விஷால் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.
நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டிக்கும் இடையே இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்திலுள்ள பிரபல தனியார் ஓட்டலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் அக்டோபர் 9 ஆம் தேதி திருமணம் நடத்துவது என இரு வீட்டார்களும் முடிவெடுத்தனர். இந்த நிச்சயதார்த்த விழாவில், மலையாள சினிமா நடிகர் மோகன்லால், நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிச்சயதார்த்த விழாவில் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனிஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்நிலையில், அனிஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த விழா புகைப்படங்கள் உட்பட அனைத்தையும் நீக்கியுள்ளார். மேலும், விஷால் – அனிஷா அல்லா ரெட்டி ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இருவரும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் நடக்குமா? அல்லது நிறுத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது விஷால் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் – 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு, நடிகர் விஷாலை நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் இணைத்து பேசப்பட்டது. இதனை மறுத்த வரலட்சுமி விஷால் தனக்கு நல்ல நண்பர் என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.