ஆந்திரா, தெலுங்கானாவை கலக்கும் விஷாலின் அபிமன்யுடு

அபிமன்யுடுவில் நடித்திருக்கும் சமந்தாவுக்கு தெலுங்கில் இது ஹாட்ரிக் வெற்றி. ராம் சரணுடன் நடித்த ரங்கஸ்தலம் மாபெரும் வெற்றி. மகாநடியும் வெற்றி.

பாபு

இரும்புத்திரை படத்தின் தெலுங்குப் பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியானது. படத்துக்கு முதல் நாள் கூட்டம் குறைவு. வாய்மொழி மற்றும் ஊடக விமர்சனங்களால் இரண்டாம், மூன்றாம் நாள் படம் பிக்கப்பாகி இன்று மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கிறது.

ஒருகாலத்தில் சிரஞ்சீவி நடித்த தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் கல்லா கட்டின. அதன் பிறகு விஜயசாந்தியின் ’வைஜெயந்தி ஐபிஎஸ்’ ஒரு புயலாக தமிழகத்தை சுருட்டியது. டாக்டர் ராஜசேகரின் ’இதுதாண்டா போலீஸ்’ தமிழ் ரசிகனின் நாடி நரம்பை முறுக்கேற்றியது. தெலுங்கு சினிமாவின் அந்த கோல்டன் எறா முடிவுக்கு வந்து வருடங்களாகிறது. தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழகத்தில் அதிகம் வெளியாவதில்லை. அப்படியே வெளியானாலும் மகேஷ்பாபுவின் நந்து, குமரன் போன்று சின்ன சலனத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.

மாறாக தமிழப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை அவ்வப்போது பெற்று வருகின்றன. ரஜினி, விஜய் படங்கள் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷாலுக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் சின்ன மார்க்கெட் உள்ளது. இதில் சூர்யாவின் மார்க்கெட் பெரிது. தெலுங்கு உரிமை 18 கோடிகள் வரை போகின்றன.

தமிழ் நடிகர்கள் தெலுங்கில் ஆதிக்கம் செலுத்துவது போல் தமிழில் ஆதிக்கம் செலுத்த தெலுங்கு நடிகர்களும் முயல்கின்றனர். அல்லு அர்ஜுனின் ’நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்தை தெலுங்கில் வெளியான அதேநாள் ’என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் தமிழில் வெளியிட்டனர். சின்ன சலனம்கூட இல்லை. சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் படத்தை ’பரத் எனும் நான்’ என்ற பெயரில் சென்றவாரம் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கும் பெரிய வசூல் இல்லை. இத்தனைக்கும் தெலுங்கில் படம் சூப்பர்ஹிட்.

இந்த நேரத்தில்தான் விஷாலின் இரும்புத்திரை அபிமன்யுடு என்ற பெயரில் சென்றவாரம் தெலுங்கில் வெளியானது. அதனுடன் வெளியான இரு நேரடி தெலுங்குப் படங்களான ஆபிஸரையும், ராஜு காடுவையும் அபிமன்யுடு முதல் சுற்றிலேயே வீழ்த்தியுள்ளது.

முதல்நாள் அபிமன்யுடுவின் ஆந்திரா, தெலுங்கானா வசூல், 89 லட்சங்கள் மட்டுமே. படம் இரண்டாவது மூன்றாவது நாள்களில் பிக்கப்பாகி மூன்று நாள் முடிவில் 6.35 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழ் டப்பிங் படத்துக்கு இதுவொரு சாதனை வசூல். இதில் மூன்றில் ஒரு பகுதிகூட நாகார்ஜுனின் ஆபிஸரோ, ராஜ் தருணின் ராஜு காடோ வசூலிக்கவில்லை.

படத்துக்கு கிடைத்துவரும் நேர்மறை விமர்சனங்களால் அபிமன்யுடு தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெறும் என்கிறார்கள். விஷாலின் தெலுங்கு மார்க்கெட் அபிமன்யுடுவின் வெற்றி காரணமாக சூடு பிடித்துள்ளது.

அபிமன்யுடுவில் நடித்திருக்கும் சமந்தாவுக்கு தெலுங்கில் இது ஹாட்ரிக் வெற்றி. ராம் சரணுடன் நடித்த ரங்கஸ்தலம் மாபெரும் வெற்றி. அடுத்து நடித்த மகாநடியும் வெற்றி. மூன்றாவதாக இப்போது அபிமன்யுடு.

தெலுங்கு நடிகர்களால் தமிழில் சின்ன மார்க்கெட்டையும் எட்ட முடியாத நிலையில் விஷாலின் தமிழ்ப் படம் தெலுங்கில் பெற்றிருக்கும் வெற்றி, அங்குள்ள நடிகர்களின் காதுகளில் புகையை வரவழைத்திருக்கிறது.

×Close
×Close