மறைந்த நடிகர் விவேக்கின் மனைவியும் அவருடைய மகளும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விவேக் வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். இதற்கு, திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் தனது நகைச்சுவையால் சாடியா என்.எஸ். கிருஷ்ணனின் தொடர்ச்சியாக சினிமாவில் நடிகர் விவேக் மூட நம்பிக்கைகளையும் சாதி பாகுபாடுகளையும் சாடினார். அதனால்தான், அவருக்கு திரையுலகம் அவரை சின்னக் கலைவானர் என்று கொண்டாடியது. நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், சமூக ஆர்வலர் பன்முக ஆளுமையாக விளங்கியவர் நடிகர் விவேக்.
நடிகர் விவேக் முதன்முதலில் கே.பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுகாசினியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு, தனது சிந்திக்க வைக்கும் நகைச்சுவையால் கவர்ந்தவர். தனது நகைச்சுவையாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரம் நடுதல் போன்ற தனது செயல்பாடுகளின் மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமையே கவர்ந்தார். அப்துல் கலாம் மீதான பற்றின் காரணமாக அவரது பெயரால் க்ரீன் கலாம் என்ற ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தி வந்தார்.
நடிகர் கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார். சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்வில் ஹீரோவாக இருந்த நடிகர் விவேக், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விவேக் ஏப்ரல் 17 ம் தேதி உயிரிழந்தார். நடிகர் விவேக் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் சிந்தியது.
நடிகர் விவேக் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவுக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, விவேக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவுக்கு விவேக் பெயரை வைத்து அரசாணை வெளியிட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார். நடிகர் விவேக் வாழ்ந்த தெருவுக்கு அவருடைய பெயர் வைத்ததற்கு தமிழ் திரையுலகினரும் அவருடைய ரசிகர்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் இயக்குனர் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கலைவாணருக்கு பிறகு நம் விவேக் அவர்களை நம் முதலமைச்சர் அவர்கள் கவுரவித்தது நடிகர் இனத்துக்கே கிடைத்த பெருமை… நன்றிகள் பல…” என்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் வாழ்ந்த பகுதிக்கு அவர் பெயர் சூட்டும் விழா ஜூன் 3ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு அவருடைய ரசிகர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னையில் மறைந்த நடிகர் விவேக் இல்லம் அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை, தமிழ்நாடு அரசு, சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அறிவித்த்துள்ளது. அங்கே சாலையின் பெயர் பலகையிலும் சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.