New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/10/vj-archana-2025-07-10-10-32-45.jpg)
வி.ஜே அர்ச்சனா தொகுப்பாளர், பாட்கேஸ்ட், யூடியூப், சினிமாவில் நடிப்பு என பன்முகத்திலும் கால் பதித்து வருவதற்கான பின்னனி குறித்து சுவாரசியமாக பகிர்ந்துள்ளார்.
வி.ஜே. அர்ச்சனா, தமிழ் திரையுலகில் தொகுப்பாளினி, நடிகை மற்றும் ரேடியோ ஜாக்கி எனப் பல துறைகளிலும் அறியப்பட்ட ஒரு பிரபலம். இவரது பயணம் 1999-ஆம் ஆண்டு ஜெயா டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராகத் தொடங்கியது. பின்னர் சன் டிவியில் காமெடி டைம் மற்றும் இளமை புதுமை போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து, சன் டிவி, விஜய் டிவி (நம்ம வீட்டு கல்யாணம்), ஜீ தமிழ் (அதிர்ஷ்ட லட்சுமி, சரிகமப, சூப்பர் மாம்) எனப் பல முன்னணி தொலைக்காட்சிகளிலும் தனது தொகுப்பாளர் பணியைத் திறம்படச் செய்தார். குறிப்பாக, தனது மகள் ஸாராவுடன் இணைந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றது.
2020-ஆம் ஆண்டு, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராகப் பங்கேற்று, தனது தனித்துவமான ஆளுமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து, சினிமா உலகிலும் அர்ச்சனா கால் பதித்தார். என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், நான் சிரித்தால், டாக்டர் போன்ற படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அர்ச்சனாவுக்கு ஸாரா என்ற மகள் உள்ளார். கொரோனா காலகட்டத்தில், அர்ச்சனா தனது மகளுடன் இணைந்து ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில் அவர்கள் பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ, நான்கு மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் வைரலானது. இருப்பினும், இந்த வீடியோ விமர்சனங்களுக்கும் உள்ளானது. நல்ல வியூஸ் வந்த பிறகும், சிலர் அவரை யூடியூபில் இருந்து வெளியேறும்படி விமர்சித்ததாக அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே, அர்ச்சனா பாட்காஸ்ட் தொடங்கி, திரைப்படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். "யாராவது இதைச் செய்ய வேண்டாம் என்று கூறினால், அதைத்தான் நான் செய்வேன்" என்று கூறி, சவால்களை எதிர்கொள்ளும் தனது துணிச்சலான மனப்பான்மையையும் அவர் வெளிப்படுத்தினார். அர்ச்சனாவின் இந்த நெடிய பயணம், பன்முகத் திறமையின் அடையாளமாகத் திகழ்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.