VJ Chithra Suicide: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.
வி.ஜே.சித்ரா
விஜய் டிவியின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நேற்று பின்னிரவில் அருகிலிருந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சித்ரா. அவருடன் நிச்சயமான ஹேமந்த் ரவியும் அந்த ஹோட்டலில் இருந்திருக்கிறார். இந்நிலையில் குளிக்க போவதாக சொன்ன சித்ரா, ஹேமந்த்தை வெளியில் செல்லும் படி சொல்லி இருக்கிறார். வெளியில் வந்து வெகு நேரம் ஆகியும், சித்ரா கதவைத் திறக்காததால், ஓட்டல் ஊழியரிடம் இருந்த மாற்று சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமந்த். அப்போது அங்கிருந்த மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு சித்ரா, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சின்னத்திரை நடிகர்களும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மார்டன் லுக்கில்...
இந்நிலையில் திருமணம் குறித்த குழப்பத்தில் சித்ரா இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்தி விடலாம் என்கிற எண்ணத்தில், அவர் இருந்ததாக சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த குழப்பத்தினால் திருமண தேதியை குறிப்பதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.
இதற்கிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஹேமந்த்தின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததாக முன்பே செய்திகளும் வெளியாகின. இது அனைத்திற்கும் தீர்வு காண பூந்தமல்லியில் உள்ள ஹோட்டலுக்கு ஹேமந்தின் குடும்பத்தினர் வந்திருந்ததாக தெரிகிறது. சித்ராவின் குடும்பமும் அங்குதான் இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்பமாக எதற்காக ஹோட்டலுக்கு வந்தார்கள் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை.
மணப்பெண் கோலத்தில்...
அதே நேரத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்த போதும், சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் புரியவில்லை. தற்போது சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இதற்கிடையே தனது மகள் ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து தர வேண்டி, சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”