நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில், கூட்டத்தில் அத்துமீறி பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபரைப் பிடித்து அறைந்த வி.ஜே ஐஸ்வர்யா ரகுபதி அந்த நபரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்கச் செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: VJ harassed at Captain Miller pre-release event: She caught hold of abuser, slapped him
கடந்த ஆண்டு செப்டம்பரில், மோசமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக பல பெண்கள் சமூக ஊடகங்களில் புகார் அளித்தனர். இந்த நிகழ்வு கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான்மன்னிப்பு கேட்டார்.
இப்போது, 2024-ம் ஆண்டு மற்றொரு வெட்கக்கேடான சம்பவத்துடன் தொடங்கியது. சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெற்ற நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் வி.ஜே ஐஸ்வர்யா ரகுபதிக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. வி.ஜே ஐஸ்வர்யா ரகுபதி அத்துமீறி பாலியல் தொந்தரவு அளித்த நபரைப் பிடித்து, அறைந்து தன் காலில் விழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், அவர் ஒரு நபரை ஆவேசமாக அறைவதையும், அந்த நபரை நோக்கி கத்துவதையும் பார்க்க முடிகிறது. இருவரையும் பெரும் கூட்டம் சூழ்ந்து நிற்கிறது. மேலும், ஐஸ்வர்யா ரகுபதி அந்த நபரை, “என் காலில் விழு, உன்னை செருப்பால அடிப்பேன். இப்போது ஏன் நடிக்கிறாய் நாயே? பிறகு ஏன் ஓடி வந்தாய்? நடிக்காத, நடிக்காத” என்று ஆவேசமாகத் திட்டுகிறார்.
வி.ஜே ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அந்த கூட்டத்தில், ஒரு பையன் என்னை துன்புறுத்தினான். நான் உடனடியாக அவனை எதிர்கொண்டேன், நான் அவனை அடிக்கத் தொடங்கும் வரை நான் விடவில்லை. அவன் ஓடினான், ஆனால் நான் அவனைத் துரத்தினேன், என் பிடியை விடவில்லை. ஒரு பெண்ணின் உடல் உறுப்பைப் பிடிக்கும் துணிவு அவனுக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சத்தம் போட்டு அவனைத் தாக்கினேன். என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். உலகில் அன்பான மற்றும் மரியாதைக்குரிய மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்த சில சதவீத அரக்கர்களை சுற்றி இருப்பதால் நான் மிகவும் பயப்படுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
வி.ஜே ஐஸ்வர்யாவின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நிகழ்ச்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாததற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“