விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் இதற்கு நிகழ்ச்சியில் இருக்கும் தொகுப்பாளினிதான் காரணம் என்று வி.ஜே மணிமேகலை அறிவித்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் 2 நாட்களாக சர்ச்சையில் பற்றி எரிகிறது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வி.ஜே மணிமேகலை விலகியது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜே அர்ச்சனா, மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த வி.ஜே மணிமேகலை கடந்த சனிக்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவையும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற முடியவில்லை. அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தான் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் இயங்குபவர்களுக்கு மணிமேகலை - பிரியங்கா விவகாரம்தான் அவலாகிப்போனது. மணிமேகலை விவகாரத்தில் பலரும், பிரியங்காவை விமர்சித்து வருகின்றனர். சிலர் விஜய் டிவியை வெளுத்து வாங்குகிறார்கள்.
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து மணிமேகலை கூறுகையில், “தன்னுடைய சுய கௌரவம் தான் முக்கியம். எனக்கு தன்மானம் அதிகம் அதனால் வேலை, பணம் எதுவும் தேவையில்லை என்று வந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு சீரியல் நடிகை விஜே அர்ச்சனா கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் வி.ஜே. அர்ச்சனா கூறுகையில், “பொதுவா எல்லா இடத்திலும் எல்லோருக்கும் பாதுகாப்பு கிடைக்காது. மெண்டலாகவும் சரி, பிசிகல் ஆகவும் சரி அடுத்தவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது. எப்போதும் ஒருவர் நமக்கு செக்யூரிட்டியாக வந்து நிற்க முடியாது. நம்முடைய சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமைதான்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு இடத்தில் நமக்கு சரி இல்லை என்றால் அந்த இடத்தில் துணிந்து கேள்விகள் கேட்பது தப்பு இல்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் நம்மை விட நமக்கு யாரும் துணையாக இருக்க முடியாது. நம்மை நாம் எந்த இடத்திலும் கீழேயோ அல்லது விட்டுக் கொடுக்கவோ கூடாது. ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரியான கேரக்டரில் இருக்கிறாங்க. ஆனால் இன்னைக்கு இருக்கிற சொசைட்டியில் பெண்கள் போல்டா இருந்தா மட்டும் தன் அவர்களால் நிறைய விஷயங்களை தற்காத்துக் கொள்ள முடியும்” என்று மணிமேகலைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வி.ஜே. அர்ச்சனா பேசியுள்ளார்.
வி.ஜே அர்ச்சனா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். இதையடுத்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சண்டைகளில், தனது கருத்தில் உறுதியாக இருந்து தனக்கான ஆதரவு ரசிகர்களைப் பெற்றார். தற்போது வி.ஜே அர்ச்சனா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மணிமேகலை மற்றும் பிரியங்கா குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அர்ச்சனா, “நான் விஜய் டிவியில் பணியாற்றி இருந்தாலும் மணிமேகலை மற்றும் பிரியங்காவோடு எனக்கு அதிகமான பழக்கம் இருந்தது கிடையாது. ஆனால், இந்தப் பிரச்சனையில் இருந்து மட்டுமல்ல.. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் சீனியாரிட்டி வச்சி டாமினேஷன் பண்ண கூடாது. நான் சீனியர் என்பதற்கு நான் பெரியவர் நீ சின்னவர் என்று யாரையும் பேசக்கூடாது.
அதே நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனையில் எந்த விஷயம் யார் பேசினாலும் சரி என்று நம்மால் தெளிவாக சொல்ல முடியாது. காரணம் ஒரு தரப்பு நியாயம் மட்டும்தான் வெளியே வந்திருக்கிறது. இன்னொரு தரப்பில் இருந்து இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அவர்களும் பேசினால்தான் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியவரும். அதனால் நான் இவங்க சரி அவங்க தவறு என்று சொல்ல முடியாது” என்று அர்ச்சனா கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“