சீரியல்கள் டி.ஆர்.பி-யில் சன் டிவி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், விஜய் டிவி, ஜி தமிழ் டிவி சீரியல்களும் போட்டி போடத் தவறியதில்லை. ஜீ தமிழ் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் மக்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.
ஜீ தமிழ் டிவியில் விரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ளது. மெகா ஆடிசன் மூலமாக நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் இறுதி போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீ தமிழ் டிவியில் இதற்கு முன்னர், டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில், இதுவரை பாபா பாஸ்கர் மாஸ்டர், ஸ்னேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்த நிலையில், மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல, டான்ஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு ஆர்.ஜே விஜயுடன் இணைந்து மணிமேகலையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி தமிழ் டிவியில் புதிய நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாகும் மணிமேகலைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வி.ஜே. மணிமேகலை விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தபோது, நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் ஒருவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். நான் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவர் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று என்னுடைய வேலையில் தலையிடுகிறார். எனக்கு சுயமரியாதை இருக்கிறது. அதனால், நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மணிமேகலை விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளினி பிரியங்காவைத்தான் சொல்கிறார் என்று சமூக வலைதளங்களில் மணிமேகலையின் ரசிகர்கள் பலரும் பிரியங்காவை விமர்சித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில், விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டனர்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகினாலும், விஜே மணிமேகலை சமூக வலைதள பக்கங்களில் வழக்கம் போல ஆக்டிவாக இருந்தார். அவர், மீண்டும் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், வி.ஜே. மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், மணிமேகலைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.