பிரபல யூடியூபர் இர்ஃபானின் சமீபத்திய செயல் பலரையும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் இணையவாசிகள் பலரும் கண்டனம் கூறி வருகின்றனர்.
சமூக ஊடகங்களை அவ்வளவு தொடர்ச்சியாக பின் தொடராதவர்களுக்கு கூட யூடியூபர் இர்ஃபான் குறித்து தெரிந்திருக்கும். காரணம், செய்திச் சேனல்களின் பிரைம் டைம் நியூஸில் இடம்பெறும் அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் இர்ஃபான்.
உணவகங்களுக்கு சென்று அங்கு விற்பனையாகும் உணவு பொருட்கள் குறித்து விமர்சனம் கூறி மிகவும் பிரபலமானவர் இர்ஃபான். இவரது வீடியோக்கள் இணையத்தில் லட்சக்கணக்கில் பார்வையிடப்படும். இதன் தொடர்ச்சியாக, தனது தனிப்பட்ட பயணங்கள் போன்றவற்றையும் இர்ஃபான் பதிவிட்டு வந்தார்.
சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரையும் நேர்காணல் எடுக்கும் அளவிற்கு இர்ஃபானின் புகழ் உச்சத்தை அடைந்தது. அத்துடன் சேர்த்து பல்வேறு சர்ச்சைகளிலும் இர்ஃபான் சிக்கினார். இதனால், இர்ஃபானுக்கு கண்டனங்களும் வலுத்தது.
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு விளம்பரம் செய்கிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இர்ஃபான் மீது சுமத்தப்பட்டன. அடுத்தபடியாக, தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்டது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதேபோல், தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த போது, மருத்துவர்களுடன் அதே அறையில் இருந்து தொப்புள் கொடியை வெட்டியது என இந்த சர்ச்சைகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
அந்த வகையில், தற்போது புதிய பிரச்சனையை இர்ஃபான் ஏற்படுத்தியுள்ளார். ரமலான் தினத்தன்று தனது குடும்பத்தினருடன் சென்று ஏழை மக்களுக்கு உதவி செய்வது போன்ற வீடியோவை இர்ஃபான் வெளியிட்டார். அந்த வீடியோவில் இர்ஃபான் நடந்து கொண்ட விதம், பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தும் ஏழை மக்களை இழிவுப்படுத்துவதை போன்று அமைந்ததாக பலரும் கண்டனம் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாக இர்ஃபான் கூறினார். இந்நிலையில், இர்ஃபானின் அந்த வீடியோவிற்கு வி.ஜே. பார்வதி, அந்தணன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு கூறியுள்ளனர். குறிப்பாக, புதுப்பணக்காரர்கள் இவ்வாறு தான் நடந்து கொள்வார்கள் என்றும், பிரபலங்களை நேர்காணல் எடுப்பதற்கு இர்ஃபான் தகுதி அற்றவர் என்றும் வி.ஜே. பார்வதி கூறியிருந்தார்.
மேலும், இர்ஃபான் மிகுந்த ஆணவத்துடன் நடந்து கொள்கிறார் என்று அந்தணன் தெரிவித்தார். இந்தப் பிரச்சனை மூலமாக இணைய உலகத்தில் யூடியூபர் இர்ஃபான் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.