VSP33: தமிழ் சினிமாவில் பம்பரமாய் சுழன்று வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது அவரின் மற்றுமொரு புதிய படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் வேங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இவரியக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் ‘பேராண்மை மற்றும் புறம்போக்கு’ ஆகியப் படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.
VSP33 என்று அழைக்கப்படும் இப்படம் விஜய் சேதுபதியின் சினிமா கரியரில் 33-வது படமாக உருவாகிறது. அவருடன் முதன் முறையாக அமலா பால் ஜோடி சேர்கிறார்.
சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை இப்படத்தைத் தயாரிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா எடிட்டராகப் பணியாற்றுகிறார். படத்திற்கு இசை நிவாஸ் கே பிரசன்னா.

இதுபற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இயக்குநர் ரோகாந்தை தொடர்புக் கொண்டோம்.
”இசையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைக் காலங்களில் கதை பயணிக்கிறது.
இன்று பழனியில் எனது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் ’க்ளாப்’ அடித்து படபிடிப்பை துவக்கி வைத்தார். படத்தில் இடம் பெறும் காவடியாட்ட பாடலோடு படபிடிப்பு தொடங்கியுள்ளது.
படத்தில் நடிக்கும் நடிகர்களை தினம் ஒருவராக ட்விட்டரில் அறிவிக்க இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்’ என்றார்.