ஆஷா மீரா, இந்தியன் எக்ஸ்பிரஸ்
மெர்சல் திரைப்படத்தின் டைட்டில் தொடர்பான பிரச்சனையே சமீபத்தில்தான் தீர்ந்தது. மெர்சல் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அப்பாடா, இனிமே எந்த பிரச்சனையும் இல்லாமல் தளபதி திரைப்படம் வெளியாகும் என, விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சினிமா டிக்கெட் விலை உயர்வு பிரச்சனையால் புதிய திரைப்படங்களின் வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், தீபாவளியன்று விஜய், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் என பட்டாளமே களமிறங்கியுள்ள மெர்சல் வெளியாகுமா என்பதற்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. இதற்கு விடை தேடுவதற்காக, மெர்சல், சங்கமித்ரா, இரவா காலம் என அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களை தயாரித்திருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹேமாருக்மணியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நேர்காணல் செய்தது.
மெர்சல் திரைப்பட வெளியீட்டின் தற்போதைய நிலை என்ன? ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தினர் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நீங்கள் வேறு ஏதாவது மாற்று திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
மெர்சல் திரைப்படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.
அனைத்து தரப்பினரிடமும் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். எல்லா தரப்பினருக்கும் லாபம் ஏற்படும் வகையிலான முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம். நாங்கள் வேறு எந்த மாற்று திட்டமும் வைத்திருக்கவில்லை. நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது.
தமிழக அரசின் கேளிக்கை வரி குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?
இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரங்களில் முடிவு எடுப்பவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
விஜயின் கத்தி, தெறி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள்போல் அல்லாமல், மெர்சல் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆனால், அவருக்கு நிறைய குழந்தை ரசிகர்கள் இருக்கிறார்களே..இதனால், ஏதேனும் படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
எல்லோரும் ‘யு’ சான்றிதழ்தான் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. அது ஒன்றும் ‘ஏ’ சான்றிதழ் இல்லையே. குழந்தைகளும் ‘மெர்சல்’ திரைப்படத்தை பார்க்கலாம்.
மெர்சல் திரைப்படத்தின் விளம்பர யுக்திகளும் வித்தியாசமாக இருந்தது. ட்விட்டர் ஈமோஜி உள்ளிட்ட புதிய விளம்பர வழிமுறைகள் குறித்து சொல்லுங்கள்...
மெர்சல் திரைப்படம் தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100-வது திரைப்படம். அதை விஜய் போன்ற மாஸ் ஹீரோவுடன் கொண்டாடுகிறோம். அதில், ஒன்றுதான் ட்விட்டர் ஈமோஜி. இப்போதெல்லாம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தான் இருக்கின்றனர். ஒரு திரைப்படத்துக்கு விளம்பரம் செய்வதென்பது, பட நிறுவனம் என்ன செய்கிறது என்பதல்ல. மற்றவர்கள் அந்த படத்திற்காக என்ன செய்கிறார்கள் என்பதுதான். மக்களுடன் கலந்துரையாடுவதுபோன்று இருக்க வேண்டும் என நினைத்தோம். அதேபோல் ஏ.ஐ. சாட் பாட் மூலம் விஜயின் ரசிகர்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்.
படப்பிடிப்பின்போது விஜயிடம் நீங்கள் பார்த்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, அங்கு படத்திற்காக விஜய் சார் மேஜிக் கற்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு கற்றுக்கொடுத்த மேஜிசியன்கள் கற்றுக்கொள்ள மாதகணக்கில் எடுத்துக்கொண்ட வித்தைகளை விஜய் சில மணிநேரங்களிலேயே கத்துக்கிட்டதா எங்கிட்ட சொன்னாங்க. ஷூட்டிங்கு கொஞ்ச நேரம் முன்பு வரைக்கும் அவர் மேஜிக் பயிற்சி எடுத்துக்கிட்டே இருப்பாரு. அந்த சீன் டேக் ஓகே ஆகுறப்ப, விஜய் பயிற்சியில செய்ததவிட சிறப்பா செஞ்சிருப்பாரு. அவருடைய சின்ன சின்ன உடல்மொழி, பார்க்க ரொம்ப சிறப்பா இருக்கும். ஆனால், ரியல் லைஃப்ல அவர் முற்றிலும் வித்தியாசமானவர். அவர் ரொம்ப சிறந்த நடிகரா இருக்கிறதுனாலதான் இதெல்லாம் செய்ய முடியுது. பெரிய ஹீரோக்களுக்கு நல்ல நடிகர்கள் என்ற பாராட்டு கிடைப்பதில்லை. மாஸ் ஹீரோக்கள் எல்லோருமே நல்ல நடிகர்கள் இல்லன்னு ஒரு கருத்திருக்கு. ஆனால், அது பொய் என்பதை நிரூபித்த விஜய்யை பார்த்த பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு.
தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.