வி மிஸ் யூ கண்ணம்மா! சீரியல் ரசிகைகள் சோகம்!

எவ்வளவு பெரிய சீரியலானாலும் முக்கிய கதாபாத்திரம் மாறும்போது, சற்று பின்னடைவை சந்திக்கும். அதிலும் கண்ணம்மா என்பவள் ஒரு சீரியல் நடிகை மட்டுமல்ல. அவள் ஒரு சகாப்தம். பல பெண்களின் முன்னோடி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் இப்போது அந்த சீரியலில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பத்தில் மாமியார் கொடுமை, சித்தி கொடுமை, அடிமை வாழ்க்கை வாழும் பெண், நிறவேற்றுமை என வழக்கம்போல சீரியலுக்கான இலக்கணத்துடன் பயணித்தது. அதனால் பெரிதும் கவனிக்கப்படாமலே இருந்தது. பின்னர் அதிரடி திருப்பங்கள் வரவே, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் பாரதி கண்ணம்மா தொடர் சென்றடைந்து விட்டது.

என்னதான் பாரதி தன் மனைவி மீது சந்தேகபட்டாலும், அதை சகித்து கொண்டு வாழாமல் கண்ணம்மா அந்த வாழ்க்கையை விட்டு  வெளியேறி, தன்னால் முடிந்த சிறிய  வேலைகளை செய்து தன்னுடைய  வாழ்க்கையையும், மகளையும் அவளே பார்த்து கொள்வது, அதிலிருந்து வெளிவர முடியாமல் அடிமை வாழ்க்கை வாழும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அவர்களுக்கு தன்னம்பிக்கை, சுயமரியாதை போன்ற விஷயங்களை இந்த சீரியல் கடத்துவதால் மக்கள் மத்தியின் பெரும் வரவேற்பு பெற்ற சீரியலாக இது திகழ்ந்தது.

இப்படி ஒரு நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை நாளாக கண்ணம்மாவாக நம்மை அனைவரையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகிவிட்டார் எனும் செய்தி ரசிகைகளின் மனதில் இடியாக பாய்ந்துள்ளது. ஒரு நாளில் எத்தனையோ சீரியல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. எத்தனையோ நடிகைகளும், நடிகர்களும் நடிக்கின்றனர். ஆனால் கண்ணம்மா அந்த எத்தனையோ என்பதில் ஒருவள் இல்லை. கண்ணம்மா என்பவள் தனி ஒருவள்.

உண்மையில் கண்ணம்மாவை ரசிப்பவர்களுக்கு, ரோஷினி ஹரிப்பிரியனின், வீடியோக்களை பார்க்கும்போது உண்மையில் இவர்தான் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று நம்பமுடியாத வண்ணம் இருக்கும். இவரை பார்க்க கண்ணம்மா மாதிரியே இல்லை என்று குழம்பி போவார்கள்.  

அப்படி தன்னுடைய இயல்பை மீறி, உடல்மொழி, முகபாவனை என எல்லாவற்றிலும் கண்ணம்மாவாக வாழ்ந்திருப்பார் ரோஷினி. கண்ணம்மா இல்லையென்றால் இந்த சீரியல் இல்லை என்பது போல் இருக்கும் அவரது நடிப்பு. நிஜவாழ்க்கையில் இன்னும் திருமணம் ஆகாத ரோஷினி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பது என்பது மிகப்பெரிய சவால். ஆனால் அதையும் அவர் உடைத்து தன் நடிப்பின் மூலம் ஈடு செய்து இருப்பார். நடிப்பில் சினிமா நடிகைகளை மிஞ்சிவிட்டார் ரோஷினி ஹரிப்பிரியன். அதனால் தான் இப்படி ஒரு நடிகை சின்னத்திரையில் இருந்தால் மட்டும் பத்தாது, வெள்ளித்திரைக்கும் வேண்டும் என கோலிவுட் சினிமாவே கண்ணம்மாவை பார்த்து ஆசைப்பட்டு விட்டது

இனி ரோஷினியை கண்ணம்மாவாக நாம் பார்க்க முடியாது. அதேபோல் கண்ணம்மாவின் இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்க ரசிகர்களாலும் முடியாது.

ஆனால் அசப்பில் கண்ணம்மா ரோஷினியை போலவே இருக்கும் வினுஷா இனி புது கண்ணம்மாவாக நம்மை சந்திக்க போகிறார். எவ்வளவு பெரிய சீரியலானாலும் முக்கிய கதாபாத்திரம் மாறும்போது, சற்று பின்னடைவை சந்திக்கும். அதிலும் கண்ணம்மா என்பவள் ஒரு சீரியல் நடிகை மட்டுமல்ல. அவள் ஒரு சகாப்தம். பல பெண்களின் முன்னோடி.

வினுஷாவை பொறுத்தவரையில் அவர் எப்படி நடிக்கிறார் என்பதை விட, தன் நடிப்பின் மூலம், கண்ணம்மாவின் ரசிகர்களை எப்படி ஈடுகட்ட போகிறார் என்பதுதான் சீரியல் ரசிகைகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: We miss you kannama bharathi kannama serial fans feeling sad

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com