கொரோனா காலக்கட்டத்தில், இமயமலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அறியவகை பாம்புக்கு, பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயரை சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டானிக் படத்தின் மூலம் உலகம் அறிந்த நாயகனாக மாறிய நடிகர் லியோனர்டோ டிகாப்ரியோ, தீவிர சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். உலகளவில் காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனித இனத்திற்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் டிகாப்ரியோவின் பங்களிப்பை போற்றும் வகையில், ஒரு அறியவகை பாம்புக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், மேற்கு இமயமலை பகுதியில், அரியவகை பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பாம்புகளை போல் இல்லாமல், மிகவும் வித்தியாசமாக இருந்த இந்த பாம்பை, வீரேந்தர் பரத்வாஜ் என்பவர் கண்டுபிடித்த நிலையில், இது குறித்து அவர் தனது சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு, அந்த பாம்பின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த பாம்பு எந்த வகையை சார்ந்தது என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் அதிகரித்தது.
ஒரு சிலர் இந்த பாம்பு, இமயமலை பகுதிகளில் காணப்படும், லியோபெல்டிஸ் ரெப்பி வகையை சார்ந்தது என்று கூறிய நிலையில், பாம்பின் செதில்கள் மற்றும் வண்ண அமைப்புகள் இருந்ததால் இது அந்த வகையாக பாம்பாக இருக்க முடியாது என்றும் கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பாம்பின் மரபனுவுடன், ஆசியாவில் காணப்படும் அரியவகை பாம்பு இனங்களின் மரபணுடன் ஓப்பிட்டு ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த பாம்பின் மரபணு எந்த பாம்புடனும் ஒத்துபோகாத நிலையில், இது இமயமலை பகுதிகளில் காணப்படும் அரியவகை பாம்பு இனம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். இது குறித்து சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இந்த அறிக்கை சர்வதேச நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே தற்போது இந்த பாம்புவுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனர்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் வகையில், ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“