த்ரிஷா திரையில் ஜொலிக்காதது ஏன்? மார்க்கெட் என்னாச்சு?

த்ரிஷா திறமையான நடிகை. கொடுத்த வேடத்துக்கு நியாயம் செய்யக்கூடியவர். இவரிடம் அழகும் இருக்கிறது. இளமைத் தோற்றத்திலும் குறைவில்லை. ஆனாலும், இவரால் சரியான படங்களைத் தேர்வு செய்ய...

ஜெய சக்தி

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகள் என்றால் அது அனுஷ்கா, நயன்தாரா தான். இவர்களுக்குத் தொடர்ந்து நல்ல படங்கள் கிடைப்பதோடு அவை வெற்றி அடைந்தும் வருகின்றன. இருவருமே ஆரம்பத்தில் எந்தப் படம் கிடைத்தாலும் நடிக்கலாம் என்ற நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் இன்று படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். என்னதான் தமிழில் பெண்களை மையப்படுத்தி படம் எடுத்தாலும் ஓடாது என்ற நிலையை இருவருமே மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இவர்களைவிடவும் சீனியரான த்ரிஷாவின் நிலை?  இவர்கள் மூவரின் திரை வாழ்வைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

அனுஷ்காதனிக் கொடி நாட்டிய அருந்ததி

ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் வழக்கமான நடிகைகளின் படங்கள் போலவேதான் இருக்கும். தமிழில் இவர் அறிமுகமான ரெண்டு படத்தில் கிளாமர் தூக்கலாக இருந்தது. கதாநாயகிக்கென்று பெரிதாக எதுவும் வேலை இல்லாத வேடம்தான். அப்படிச் சில படங்கள் நடித்த பிற்கு வந்த அருந்ததி படம் தான் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. இவரது கம்பீரமான அழகும், வசீகரமும் அருந்ததி பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போக அதுபோன்ற பீரியட் படங்களில் அவருக்கு வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த மாதிரி படங்களுக்கு அவரது உயரமும் தோரணையும் நன்றாகவே கைகொடுத்தன.

அருந்ததிக்குப் பிறகு ருத்ரமாதேவி, பாகுபலி என்று தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டிருக்கிறார். பாகுபலி 2-வின் அசத்தல் நாயகியாக உருவெடுத்திருக்கிறார். இடையில் வேட்டைக்காரன், சிங்கம் என்று வழக்கமான வேடங்களில் நடித்தாலும் அருந்ததியால் கிடைத்த புகழும் அந்தஸ்தும் இன்னமும் மங்காமல் இருக்கிறது. அதற்கு அடிப்படையான அழகும் கம்பீரமும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. இவற்றோடு நடிப்புத் திறமையும் சேர்ந்திருப்பதால் இவரது கொடி உயரத்தில் பறக்கிறது.

நயன்தாராஎன் வழி தனி வழி

நயன்தாரா இன்று அடைந்திருக்கும் உயரம் பிரமிப்பூட்டுகிறது. ஐயா, சந்திரமுகி போன்ற படங்களில் சாதாரண வேடங்களில் வந்த நாட்கள் இப்போது மங்கலான கனவுபோல இருக்கின்றன. வல்லவன், வில்லு போன்ற படங்களில் வெறும் கிளாமர் பொம்மையாக வந்துபோன நினைவுகளும் மறைந்துவிட்டன. நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்திலும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் நிச்சயமாக இருக்கிறது.

பல்வேறு சர்ச்சைகளிலும் கிசுகிசுக்களிலும் சிக்கினாலும் இவரது திரை வாழ்வின் பயணம் சீராக உள்ளது. இப்போது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இவருடைய கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள். இவருக்கெனவே ஒரு சினிமா பிசினஸ் இருக்கிறது. அதுதான் இவருக்கு மாயா, நானும் ரவுடிதான், டோரா, அறம் போன்ற பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனஅந்தப் அப்டங்களில் சிறப்பாக நடித்து அந்த வாய்ப்புகளுக்கு முற்றிலும் நான் தகுதியானவள் என்பதையும் நயன் நிரூபித்துவருகிறார். அழகும், நடிப்பும் கொண்ட இவரது திரை ஆளுமை பிரமிக்கவைக்கிறது.

மேலும், ஒவ்வொரு படத்துக்கும் தன்னை நன்றாகவே தயார் செய்துகொள்ளும் திறமை இவருக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. இப்போதெல்லாம் படங்களில் முழுமையாக கவனம் செலுத்திவருகிறார். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். வீண் சலசலப்புகளுக்கும், கிசுகிசுக்களுக்கு இடம் கொடுப்பதில்லை. இவை அனைத்தும் சேர்ந்து நயன்தாராவை, என் வழி தனி வழி என்று தெம்போடு சொல்லவைக்கின்றன. நயன்தாராவுக்கென்று திரையரங்கில் பறக்கும் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் இதற்குக் கட்டியம் கூறுகின்றன.

தடுமாறும் த்ரிஷா 

இவர்களுக்கு முன்பே பிரபலமாக இருந்த த்ரிஷாவுக்குத் தற்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை. சமீபத்தில் கிடைத்த படங்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. பூலோகம், தூங்காவனம், சகலகலா வல்லவன், அரண்மணை, நாயகி ஆகியவை இவருக்கு ஏற்றம் தரும் என்ற எதிபார்ப்பு நிறைவேறவில்லை.  கொடி படத்தில் மட்டும் சற்று மக்கள் மனதில் தங்கினார். ஆனாலும் அதுவும் பெரிய அளவில் அவரது சினிமா வாழ்க்கைக்கு பாசிட்டிவாக மாறவில்லை.

 

த்ரிஷா அபாரமான நடிகை இல்லை. ஆனால், திறமையான நடிகை. கொடுத்த வேடத்துக்கு நியாயம் செய்யக்கூடியவர். இவரிடம் அழகும் இருக்கிறது. இளமைத் தோற்றத்திலும் குறைவில்லை. ஆனாலும், இவரால் சரியான படங்களைத் தேர்வு செய்ய முடியவில்லை. இவரும் பல படங்களில் கிளாமராக நடித்திருக்கிறார். ஆனால், நயன்தாராவுக்கோ (பில்லா) அனுஷ்காவுக்கோ (விக்ரமார்க்குடு) கிளாமர் கைகொடுக்கும் அளவுக்கு இவருக்குக் கைகொடுப்பதில்லை. எனக்கும் உனக்கும் என்பது போன்ற கிளாமர் இல்லாத வேடங்களில்தான் இவர் அதிகம் சோபிக்கிறார். அந்தப் படங்களும் கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் அல்ல. கதைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள இவர் மெனக்கெடுவதும் இல்லை. சாமி, கில்லி, ஆய்த எழுத்து, சர்வம் என கிட்டத்தட்ட ஒரே தோற்றம், ஒரே நடிப்பு என்று இருப்பதால் இவரால் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

இடையில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் வருண் மணியனுடன் காதல், திருமணம் என்று ஆரம்பிக்கவே சுத்தமாக ஃபீல்டில் இருந்து வெளியேறினார். ஆனால் அதுவும் பின்னர் அவருக்கு சிக்கலாகி திருமணம் நின்று போனது. இதுபோன்ற சூழ்நிலைகள் சினிமாவில் உள்ள எல்லா நடிகைகளுக்கும் ஏற்படக்கூடியதுதான். அவர்களுக்கு மன உளைச்சல்கள் இருக்கும், அதையெல்லாம் மீறித்தான் ஜெயிக்கிறார்கள். த்ரிஷாவும் அவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு  மீண்டும் மெல்ல சினிமாவுக்குள் பிரவேசமானார். தற்போது நிலைமை ரொம்ப மோசம் இல்லை என்றாலும் அவருக்கான நேரம் கூடி வரவில்லையோ என்னமோ, படங்கள் எதுவும் பெரிதாக பிரேக் கொடுக்கவில்லை.

தற்போது தமிழில் மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களுக்கு புக் ஆகியுள்ளார். அனுஷ்கா, நயன்தாராவைப் போல இவரும் முக்கியமான நாயகியாக உருவெடுக்கிறாரா என்று பார்க்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close