பாபு
தனது நண்பர் டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு மட்டுமே படங்கள் நடித்துத்தரும் சிவகார்த்திகேயன் திடீர் திருப்பமாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். ராஜேஷ் எம். இயக்கும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயனின் இந்த யூ டர்னின் மர்மம் என்ன?
துண்டு துக்கடா வேடங்கள் கிடைக்குமா என்று சிவகார்த்திகேயன் ஆபிஸ் ஆபிசாக ஏறி இறங்கிய நேரம், அவருக்காக தயாரிப்பு நிறுவனங்களிடம் பரிந்துரை செய்தவர் டி.ராஜா. அதற்குமுன் படங்களை புரமோட் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மெரினா, 3, மனம் கொத்திப் பறவை என்று மெல்ல எழுந்து வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 இல் மூன்று படங்கள் வெளியானது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம். மூன்றாவது படம் சிவகார்த்திகேயனை 30 கோடிகள் வியாபாரம் உள்ள ஸ்டாராக நிலை நிறுத்தியது. இந்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் மூன்று நிறுவனங்களுக்கு படம் நடித்துத்தர அவர் ஒப்புக்கொண்டார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா.
புதிய பட பூஜையில் சிவகார்த்திகேயன்
மிகக் குறைந்த சம்பளத்தில் அன்று சிவகார்த்திகேயனுடன் இவர்கள் ஒப்பந்தம் போட்டனர். ஆனால், அந்த வருடமே சிவகார்த்திகேயனின் சம்பளமும் வியாபாரமும் விஸ்வரூபமெடுத்தது. முன்பு பேசிய சம்பளத்தில் நடிக்க முடியாது. இப்போதைய என்னுடைய வியாபாரத்துக்கு ஏற்ற சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்றார் சிவகார்த்திகேயன். சம்பந்தப்பட்டவர்கள் முடியாது என்றனர். விஷயம் பஞ்சாயத்தானது.
மேலே உள்ள மூன்று தயாரிப்பு நிறுவனங்களில் எஸ்கேப் ஆர்டிஸ்ட், வேந்தர் மூவிஸ் இரண்டுக்கும் வாய் மொழியாகவே சிவகார்த்திகேயன் நடித்துத் தருவதாக உறுதியளித்திருந்தார். அவர்கள் இருவரும் சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் எதுவும் தந்திருக்கவில்லை. ஆனால், ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் தந்திருந்தார். அதனால் அவருக்கு மட்டும் ஒரு படம் நடித்துத்தருவது என முடிவானது. இந்த முடிவை எட்டும் முன்பே பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை சிவகார்த்திகேயன் நிறுத்தியிருந்தார். டி.ராஜாவின் தயாரிப்பில் மட்டுமே நடித்து வந்தார். ரெமோ, வேலைக்காரன், சீமா ராஜா என்று தொடர்ந்து 24 ஏஎம் ஸ்டுடியோஸில் நடித்து வருகிறவர், நடுவில் திடீரென்று ஞானவேல்ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்த மர்மம் இதுதான்.
இந்தப் படத்தையும் முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாகத்தான் இருந்தது. சிவகார்த்திகேயனுக்கேற்ற கதை இல்லாததுதம், தானா சேர்ந்த கூட்டம் தந்த ஏமாற்றமும் சேர்ந்து விக்னேஷ் சிவனுக்கு பதில் ராஜேஷை ஒப்பந்தம் செய்ய வைத்தது.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் பிறகு ராஜேஷ் இயக்கிய அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகியவை அட்டர் ப்ளாப்பாயின. சிவகார்த்திகேயனை வைத்து இயக்குகிற படமாவது ராஜேஷை பழைய ட்ராக்குக்கு கொண்டு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.