பாபு
ஜுன் 7 காலா வெளியாகிறது. ஆச்சரியமாக காலாவின் சில ஏரியாக்கள் இன்னும் வாங்கப்படாமல் உள்ளது. ரஜினி படம் என்றால் பூஜை அன்றே விலைபோவதுதான் வழக்கம். ஏன் காலாவுக்கு மட்டும் இப்படி?
ரஜினி படங்கள் அவுட்ரேட் அல்லது மினிமம் கியாரண்டி எனப்படும் எம்ஜி முறைப்படி வாங்கப்படும். அவுட்ரேட் என்றால், இந்த ஏரியாவுக்கு இத்தனை கோடிகள் என விலை பேசப்படும். அந்தத் தொகையை வசூலித்தாலும் வசூலிக்காவிட்டாலும் அது வாங்கியவர்களின் ரிஸ்க். எம்ஜி என்று வரும்போது, இத்தனை லட்சங்கள் என்று ஒவ்வொரு திரையரங்கிடமிருந்தும் வசூலிப்பார்கள். அந்தப் பணத்துக்கு மேல், டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளருக்கு இவ்வளவு, திரையரங்குக்கு இவ்வளவு என பிரித்துக் கொள்வார்கள். திரையரங்குகள் தங்களின் டிக்கெட் சதவீதத்திலிருந்து கொடுத்த பணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும். அப்படி வசூலித்த பிறகும் சதவீத அடிப்படை தொடரும்.
ரஜினி படங்கள் அவுட்ரேட், எம்ஜி எனப்படும் இவ்விரு முறைகளில் மட்டுமே விற்கப்பட்டு வந்தன. லிங்கா படத்தின் நஷ்டம் காரணமாக கபாலியில் இருந்தே அவுட்ரேட், எம்ஜி முறைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஜுன் 1 இன்று முதல் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளும் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருப்பதை காரணம்காட்டி, அவுட்ரேட், எம்ஜி முறைகளில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மறுக்கின்றனர். ஆகவே டிஸ்ட்ரிபியூஷன் முறைப்படியே விற்பனை நடந்து வருகிறது.
காலாவின் மதுரை, ராமநாதபுரம் ஏரியா விநியோக உரிமையை சர்ச்சைக்குரிய பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. சென்னை உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்னாற்காடு ஏரியாக்களின் விற்பனை முடிந்துள்ளது. காலாவின் தயாரிப்பாளர் தனுஷுக்கு கனத்த லாபம் கிடைத்த போதிலும், காலாவின் விநியோக உரிமையை விற்பதில் சிக்கல் ஏற்பட்டது பின்னடைவே. இதற்கு காரணமான லிங்காவில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
லிங்கா அனைவரும் சொல்வது போல் குறைவாக வசூலிக்கவில்லை. நிறைவாகவே வசூலித்தது. இருந்தும் படம் சிலருக்கு ஏன் நஷ்டத்தை தந்தது?
லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் பெயரில் தயாரித்தாலும் அவர் டம்மி தயாரிப்பாளரே, சம்பளமாக அவருக்கு பத்து கோடிகள் தரப்பட்டன. படத்தை கோச்சடையான் நஷ்டத்துக்காக ஈராஸ் நிறுவனத்துக்கு தந்தார் ரஜினி. ஈராஸ் லிங்காவின் தமிழக விநியோக உரிமையை வேந்தர் மூவிஸுக்கு விற்றது. அவர்கள் ஏரியாவாரியாக விநியோகஸ்தர்களுக்கு தந்தனர். அவர்களிடமிருந்து திரையரங்குகள் வாங்கி வெளியிட்டன.
லிங்கா படத்தின் பட்ஜெட் + ராக்லைன் வெங்கடேஷின் சம்பளம் + ரஜினியின் சம்பளம் + ஈராஸின் லாபம் + வேந்தர் மூவிஸின் லாபம் + விநியோகஸ்தர்களின் லாபம் + திரையரங்குகளின் லாபம்.
ஒரு படம் ஆறு முதலாளிகளுக்கு சம்பாதித்து தர வேண்டியிருந்தது. பத்து ரூபாய் பொருளை இருபது ரூபாய்க்கு விற்கலாம். ரஜினி என்ற பிராண்ட் நேமை வைத்து அறுபது ரூபாய்க்குக்கூட விற்கலாம். அதையே நூறு ரூபாய்க்கு விற்றால், பத்து ரூபாய் பொருள் 99 ரூபாயை வசூலித்தாலும் ஒரு ரூபாய் யாருக்காவது நஷ்டத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். லிங்காவில் அதுதான் நடந்தது. படம் நிறைவாக வசூலித்தும் அதன் லாபச்சங்கிலியின் கடைசி கண்ணியில் இருந்த சிலருக்கு லிங்கா நஷ்டத்தை கொடுத்தது.
காலா படத்தின் வசூலை பொறுத்தே ரஜினியின் அடுத்தடுத்த படங்களின் விற்பனை, பட்ஜெட் ஆகியவை அமையும் என்பதால் காலாவின் வெளியீடை திரையுலகம் உற்று கவனிக்கிறது.