சுசீந்திரன், யுவன் இணைவதில் என்ன பிரச்சனை?

சுசீந்திரனின் மார்க்கெட் சுத்தமாக முடங்கிவிட்டது. சர்ச்சைகளின் மூலம் மட்டுமே தனது பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.

பாபு

சுசீந்திரனின் புதிய படம் சாம்பியன். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என சசீந்திரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அரோல் கொரேலியை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளார், சுசீந்திரன். இந்த மாற்றம் ஏன் என்று பலரும் வினவிய நிலையில் சுசீந்திரன் விளக்கம் ஒன்றை அளித்தார்.

“யுவன் சங்கர் ராஜாவுடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை. யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனைச் சுற்றியுள்ள புதிய நண்பர்கள்தான். இந்த தகவலைக்கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தில் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என சுசீந்திரன் விளக்கமளித்திருந்தார்.

யுவன் சுசீந்திரனின் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஆதலால் காதல் செய்வீர் படத்துக்குப் பிறகு பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு கடைசியாக வெளியான நெஞ்சில் துணிவிருந்தால்வரை சுசீந்திரனின் அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்தவர் டி.இமான். உண்மை இப்படியிருக்க யுவன் மீதும், அவரது ரசிகர்கள் மீதும் சுசீந்திரனுக்கு திடீர் கரிசனம் எழ என்ன காரணம்?

இந்த கேள்விக்கான பதிலை புரிந்து கொள்ள சற்று பின்னோக்கி போக வேண்டும்.

சசீந்திரன் ஆதலால் காதல் செய்வீர் படத்தை முதல் காப்பி அடிப்படையில் இயக்கி தயாரித்தார். அதாவது தயாரிப்பாளர் சுசீந்திரனுக்கு 7 கோடிகள் ரூபாய் தருவார். அதில் மொத்தப் படத்தையும் முடித்து முதல் காப்பியை தந்துவிட வேண்டும். இந்த ஏழு கோடியில்தான் சுசீந்திரனின் சம்பளமும். ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு முந்தையப் படமான ராஜபாட்டை பிளாப் என்பதாலும், ஆதலால் காதல் செய்வீர் சின்ன பட்ஜெட் படம் என்பதாலும் யுவனுக்கு அவரது சம்பளத்தில் மிகக்குறைவான அளவே தந்தார் சுசீந்திரன். ஆதலால் காதல் செய்வீர் நஷ்டப்படுத்திவிட்டது என்று சுசீந்திரன் சொன்னதால் யுவனும் சொற்ப சம்பளத்தில் இசையமைத்து தந்தார். ஆனால், படத்தை 7 கோடிக்கு முதல் காப்பி அடிப்படையில் சுசீந்திரன் தயாரித்ததும், அனைத்து செலவுகளையும் 4 கோடிக்குள் முடித்து சுசீந்திரன் 3 கோடிகள் லாபம் பார்த்ததும் யுவனுக்கு அதன் பிறகே தெரிய வந்தது. யுவனுக்கு விஷயம் தெரிந்ததால் அவரை இனி அணுக முடியாது என பாண்டிய நாடு படத்தில் டி.இமானை ஒப்பந்தம் செய்தார் சுசீந்திரன்.

ஆதலால் காதல் செய்வீர் படத்தை மட்டுமல்ல. தற்போது தயாரிப்பில் இருக்கும் ஏஞ்சலினா, ஜீனியஸ், இப்போது ஆரம்பித்திருக்கும் சாம்பியன் படங்களையும் முதல் காப்பி அடிப்படையிலேயே சுசீந்திரன் தயாரித்து இயக்குகிறார். ஏஞ்சலினா படத்தின் நாயகன்தான் அப்படத்தின் தயாரிப்பாளர். அந்தப் படத்தின் பணத்தை எடுத்தே நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை முடித்தார். ஏஞ்சலினாவை முடிக்க, ஜீனியஸ் படத்தை தொடங்கினார். இப்போது ஜீனியஸை முடிக்க சாம்பியனை தொடங்கியுள்ளார். இதில் கவனிக்க வேண்டியது, முதலில் தொடங்கிய ஏஞ்சலினா இன்னும் முடியவில்லை. ஜீனியஸை தொடங்கி அப்படியே அந்தரத்தில் விட்டுள்ளார். இரண்டு படங்கள் தொங்கலில் இருக்கையில் மூன்றாவதாக சாம்பியனை தொடங்கியிருக்கிறார்.

சுசீந்திரனின் மார்க்கெட் சுத்தமாக முடங்கிவிட்டது. சர்ச்சைகளின் மூலம் மட்டுமே தனது பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை. சாம்பியன் படம் குறித்த விளக்கத்தில், யுவனை நெருங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளவர். எப்படி தனது சாம்பியன் படத்துக்கு யுவன் இசையமைப்பார், யுவனுடன் மீண்டும் இணைகிறேன் என்று அறிவித்தார்?

சாம்பியன் படம் தொடர்பாக சுசீந்திரன் யுவனை சந்திக்கவேயில்லை. சந்திக்காமலே அவரது சம்மதத்தை பெறாமலே யுவன் இசையமைப்பார் என அடித்துவிட்டார். இப்போது யுவன் சந்திக்கவில்லை, சுற்றியிருப்பவர்கள் தடுக்கிறார்கள் என சிம்பதி உருவாக்குகிறார்.

சாம்பியன் படத்துக்கு யுவன் இசையமைப்பார், சூர்யா ஒளிப்பதிவு செய்வார் என்று சுசீந்திரன் கூறியிருந்தார். சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சூர்யா. சாம்பியன் படத்துக்கான அனைத்து வேலைகளையும் சூர்யாவே செய்து வந்தார். விளையாட்டு வீரர்களை சந்திப்பது, கோச்சுகளுடன் உரையாடுவது, புகைப்படங்கள் எடுப்பது என அனைத்தையும் சுசீந்திரனுடன் சூர்யாவே செய்தார். ஆனால், சாம்பியன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் யுவன் இல்லாதது போலவே சூர்யாவின் பெயரும் இல்லை. யுவனை சுசீந்திரனால் சந்திக்க முடியவில்லை, அதனால் வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார். சூர்யாவை ஏன் மாற்றினார்? சூர்யாவை மாற்றிய விவரத்தை சுசீந்திரன் இன்னும் சூர்யாவிடமே கூறவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் சாம்பியன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா எடுத்த புகைப்படங்களையே சுசீந்திரன் பயன்படுத்தியுள்ளார். இதுதான் இன்றைய சுசீந்திரன்.

சுசீந்திரனின் விளக்கத்துக்கு யுவன் இன்னும் பதில் அளிக்கவில்லை. பதில் கூறினால் அதுவே சுசீந்திரனுக்கு ஒரு வெற்றிதான் என்பது யுவனுக்கு தெரியும்.

மேக்கிங் அறிந்த ஒரு இயக்குநர் தயாரிப்பில் கால் பதித்து இப்படி தடம் மாறுவது அவருக்கு மட்டுமில்லை, தமிழ் சினிமாவுக்கும் இழப்புதான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close