Who are Cook with Comali season 3 contestants and Comalis Tamil News : அடடா… மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி விரைவில் வரவிருக்கிறது. தற்போது தமிழக மக்களைக் கட்டிப்போட்டிருக்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ ஆரம்பமாகவுள்ளது. இதில் இம்முறை யாரெல்லாம் கோமாளியாக இருப்பார்கள், யார் போட்டியாளர்களாகப் பங்குபெற உள்ளார்கள் என்கிற விவாதங்கள்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்.
சமையலோடு நகைச்சுவையையும் கலந்து மக்களுக்கு விருந்தளிக்கும் இந்த குக் வித் கோமாளி 3-ம் சீஸனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது. மேலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த சீசனின் கோமாளிகளையும் போட்டியாளர்களையும் கணித்து வருகின்றனர். அந்த வரிசையில், மணிமேகலை, பாடகி ஷிவாங்கி, பாலா மற்றும் சுனிதா ஆகியோர் நிச்சயம் பங்கேற்கவுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் புகழ் இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. முதல் சீசனில் ரம்யா பாண்டியனோடும், இரண்டாம் சீசனில் பவித்ராவுடனும் இவர் சேர்ந்து செய்த காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது. ஷிவாங்கி மற்றும் புகழுக்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அதிகம். ஆனால், இந்த சீசனில் புகழ் இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனால், நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர்களிடம் புகழ் வருவாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகளை நிரப்பினர். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிலளித்த செஃப் தாமு, “ஆம் 100 சதவீதம் (sic)” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இதுவரை உறுதி செய்யப்பட்ட ஆறு போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை ஊர்வசி, வி.ஜே.அர்ச்சனா மற்றும் ‘சர்வைவர்’ புகழ் விஜயலட்சுமி ஆகியோர் வரும் சீசனில் போட்டியாளர்களாகப் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி ஹரிப்ரியன், ‘செந்தூர பூவே’ ஸ்ரீ நித்தி, நடிகர் நந்தன் லோகநாதன் போன்ற பிரபலங்கள் சிலர் இந்த சீசனில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் புதிய கோமாளிகளுக்கான ஆடிஷன் நடைபெற்றது. புதிய திறமைகளை விரைவில் சின்னதிரையில் காண ரசிகர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் உற்சாகமாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil