/indian-express-tamil/media/media_files/2025/08/27/aparna-sen-2025-08-27-16-55-02.jpg)
வங்காள மொழி நடிகை மீது காதல்; அவருக்காக பெங்காலி கற்ற கமல்: யார் இந்த அபர்ணா சென்?
நடிகர் கமல்ஹாசனின் பலமொழிப் புலமை குறித்து, நடிகர் சத்யராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியிருந்தார். அப்போது, 1977-ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஒரு வங்க மொழிப் படத்தில் நடித்ததையும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பேட்டியில், சத்யராஜுடன் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன், “என் தந்தை கமல்ஹாசன் வங்க மொழி ஏன் கற்றுக் கொண்டார் என்றால், அப்போது அவருக்கு அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரை ஈர்க்கும் வகையில் வங்க மொழியை முழுவதுமாக அவர் கற்றுக்கொண்டார். அதனால்தான் ‘ஹே ராம்’ படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்தின் பெயர் அபர்ணா. இப்போது நீங்கள் அதை புரிந்துகொள்ளலாம்” என்றார். இந்தத் தகவலையடுத்து, சமூக வலைத்தளங்களில் அபர்ணா சென் என்ற பெயர் அதிகம் பேசப்பட்டது.
கமல்ஹாசன் நடித்த அந்தப் படம், 'கபிதா'. தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் வங்க மொழி ரீமேக் இது.
யார் இந்த அபர்ணா சென்?
1945ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த அபர்ணா சென்னின் தந்தை சிதானந்த தாஸ்குப்தா ஒரு முன்னணி இயக்குநர். அவரது தாய் சுப்ரியா தாஸ்குப்தா சிறந்த ஆடை அலங்காரத்துக்கான தேசிய விருது பெற்றவர். கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்ட அபர்ணா, 1961ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித் ரே இயக்கிய ‘டீன் கன்யா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர், 1981-ல் வெளியான ‘36 சௌரிங்கீ லேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் அபர்ணா. இந்தப் படம் சிறந்த ஆங்கிலத் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. 1984-ல் அவர் இயக்கிய ‘பரோமா’ திரைப்படமும் சிறந்த வங்க மொழித் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
2002-ல் அபர்ணா சென் இயக்கிய ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர்’ திரைப்படம் இந்தியளவில் பெரும் கவனம் ஈர்த்தது. 2002 குஜராத் கலவரத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில், அவரது மகள் கொன்கனா சென் ஒரு தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும், ஒரு முஸ்லிம் ஆணுக்கும் இடையிலான உரையாடலாகச் செல்லும் இப்படம், வெளியானபோது பெரும் விவாதங்களைக் கிளப்பியதுடன், சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றது. சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இந்தத் திரைப்படம் பெற்றது.
விருதுகளும் மற்ற சாதனைகளும்
அபர்ணா சென் தனது திரைப்பயணத்தில் மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளார். 6 ஃபிலிம்பேர் விருதுகள், 13 வங்க மொழித் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 1986 முதல் 2005 வரை பெண்களுக்கான ‘சனந்தா’ என்ற பிரபலமான இதழையும் அவர் நடத்தி வந்தார்.
1987ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தனது தனித்துவமான படைப்புகளால் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாக உயர்ந்துள்ள அபர்ணா சென், மற்றொரு பெரும் ஆளுமையான கமல்ஹாசனின் மனம் கவர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.