பாபு
முன்பெல்லாம், தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் அரைடஜன் படங்கள் வெளியாகும். அரைடஜனுக்கும் கணிசமான திரையரங்குகள் கிடைக்கும். தியேட்டரில் தள்ளு முள்ளு இருக்குமே தவிர, தியேட்டர் கிடைப்பதில் படங்களுக்குள் தள்ளு முள்ளு இருந்ததில்லை.
இன்று நிலைமை தலைகீழ். தியேட்டரில் கூட்டம் குறைவு. படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பெரும்போட்டி. ஒரேநேரத்தில் ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் பாரசூட் முறையினால் இன்று ஒரு படத்தின் ஆயுள்காலம் பத்து தினங்களாக சுருக்கிவிட்டது. அதிலும் முதல் மூன்று முதல் ஐந்து தினங்களில் நீங்கள் வசூலை அள்ளினால்தான் உண்டு. அதற்கு அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டாக வேண்டும். இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலே திரையரங்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆயிரத்துக்கும் குறைவான திரையரங்குகளே புதிய படங்களை வெளியிடும் நிலையில் உள்ளன. ஆயிரம் என்பது ஆறுதலுக்காகச் சொன்னது. எழுநூறு திரையரங்குகள் நல்ல நிலையில் தேறினால் ஆச்சரியம்.
நிற்க. நமது விஷயத்துக்கு வருவோம்.
வரும் தீபாவளிக்கு மூன்று முக்கிய படங்கள் வெளிவர உள்ளன. அஜித்தின் விசுவாசம், சூர்யாவின் என்ஜிகே, விஜய் 62. இதில் விசுவாசம் படம் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக உள்ளனர். திரையுலகின் வேலை நிறுத்தத்தால் திட்டமிட்டதைவிட மிக தாமதமாக அவர்கள் படவேலையை தொடங்கினர். தீபாவளிக்கு நெருக்கடியா? கொஞ்சம் தள்ளி படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்று அஜித் கூலாக நகர்ந்துவிடுவார். அதனால் விசுவாசம் குறித்து அதிக கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் என்ஜிகே அப்படியில்லை. கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளனர். கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் அதனை நினைவுப்படுத்தவும் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படவிழாவில், என்ஜிகே தீபாவளிக்கு வரும் என்று உறுதி செய்தார் சூர்யா. நேற்று செல்வராகவன் தனது ட்விட்டரில் லைட்ஸ் ஆன் பார் தீபாவளி, ப்ரம் தீபாவளி என்ஜிகே ஃபயர் என்று பதிவிட்டுள்ளார். தீபாவளிக்கு எங்க படம் வருது என்பதை படம் சம்பந்தப்பட்டவர்கள் கிடைக்கிற வழிகளில் எல்லாம் உறுதி செய்து வருகின்றனர். ஆனால், படம் இன்னும் முடியவில்லை. கடைசி ஷெட்யூல்ட் நேற்றுதான் தொடங்கியிருக்கிறது.
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிவரும் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். இன்று படத்தின் சர்கார் என்று அறிவித்து, பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் எப்படியும் திரையரங்குகளை வளைத்துப் போடுவார்கள். காரணம், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது. விஜய், ரஜினி என இரு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் நிறுவனத்துக்கு திரையரங்குகள் முன்னுரிமை அளித்தே ஆக வேண்டும். இதன் காரணமாகவே என்ஜிகே டீம் கொஞ்சம் அழுத்தமாக, தீபாவளிக்கு நாங்க வர்றோம் என சத்தமிடுகிறது.
இந்தப் படங்களுடன் விஷாலின் சண்டக்கோழி 2 வும் போட்டிக்கு தயாராகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்பது விஷாலின் எண்ணம்.
தணிக்கைச்சான்றிதழ் பெற்ற சீனியாரிட்டி அடிப்படையிலேயே படங்கள் வெளியாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலே உள்ள படங்கள் எதுவும் இன்னும் முடியவில்லை. இவர்கள் தணிக்கைச்சான்றிதழ் பெறுவதற்குள் வேறு படங்கள் தணிக்கைச்சான்றிதழ் பெற்று தீபாவளிக்கு துண்டு போட்டு ரிசர்வ் செய்தால் இந்தப் படங்களின் நிலை கேள்விக்குறியே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.