கொடுக்கல் வாங்கல் தகராறில் அடிதடியில் ஈடுபட்ட சந்தானம் தான், கோலிவுட்டின் தற்போதைய சென்சேஷன். சந்தானம் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் சந்தானம். இவரைப் போல போலீஸ் வழக்கில் சிக்கிய கோலிவுட் பிரபலங்கள் யார் யார்னு பார்க்கலாமா?
குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய், அடையாறு மேம்பாலத்தில் தன்னுடைய ஆடி காரை மோதினார். அவருடன் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜியும் இருந்துள்ளார். ஆள் யாருக்கும் காயம் இல்லையென்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போக்குவரத்துப் போலீஸார். இதுதொடர்பான வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் ராதிகா சரத்குமாரின் மகள் ரெயானே திருமணத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் நடந்த சரக்கு பார்ட்டியில் கலந்துகொண்டு திரும்பிய அருண் விஜய், போலீஸ் வாகனம் மீதே காரை மோதி வழக்கில் சிக்கினார். இதில் அருண் விஜய்க்கும், அவர் காருக்கும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றாலும், போலீஸ் வாகனம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது வழக்கு பதியப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த திருச்சி எம்.பி. குமாரை, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் செந்தில் விமர்சித்தார். இதுதொடர்பாக குமார் அளித்த புகாரில், செந்தில் மீது வழக்கு பதியப்பட்டது. அவரைக் கைது செய்யவும் காவல்துறை ஆர்வம் காட்டியது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் செந்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரைக் கைதுசெய்ய இடைக்காலத்தடை விதித்தது நீதிமன்றம்.
‘தேனடை’யாக வந்து ரசிக்கவைத்த காமெடி நடிகை மதுமிதாவுக்கும், அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் உஷா. இதுதொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு மதுமிதாவிடம் போலீஸார் தெரிவிக்க, கோபமான அவர் உஷாவின் கையைப் பிடித்து கடித்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அஞ்சலியை, சினிமாவுக்கு கொண்டு வந்தவர் அவருடைய சித்தியான பாரதி தேவி. ஒன்றாக இருந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருகட்டத்தில் போலீஸ் கேஸானது. தற்போது இருவரும் தனித்தனியாக உள்ளனர். பாரதி தேவியின் மகளான ஆரத்யா, ஹீரோயினாக அறிமுகமாகிறார். அஞ்சலியை தன்னுடைய அக்கா என ஆரத்யா குறிப்பிட, ‘எனக்கு யாருமே தங்கை இல்லை’ என்கிறார் அஞ்சலி.
சினிமா தயாரிப்பாளரும், த்ரிஷாவின் முன்னாள் காதலருமான வருண் மணியன், தன்னை யாரோ தாக்கியதாகப் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில், எலெக்ட்ரீஷியன்கள் தனக்கு மரியாதை கொடுக்காததால் அவர்களை வருண் மணியன் தாக்கியதாகவும், பதிலுக்கு அவர்கள் வருண் மணியணைத் தாக்கியதாகவும் தெரிய வந்தது. இரு தரப்பும் மற்றொரு தரப்பு மீது புகார் அளித்துள்ளனர்.