தமிழ் சினிமாவுக்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ் யார்?

வாகை சந்திரசேகர், ‘தமிழ் ராக்கர்ஸை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து முடக்க வேண்டும்.’ என சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்லாமல், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட அனைத்து திரையுலகினருக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். பிரமாண்டமான பொருட்செலவில் உருவான பல திரைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஐதாண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகிற்கு சவாலாக இருந்தது, திருட்டு விசிடி. 3ஜி, 4ஜி வந்த பின்னர் திருட்டு விசிடிகளைவிட, இணைய தளங்கள்தான் பெரும் சவாலாகியுள்ளது. இவற்றில் மிக முக்கியமானது தமிழ் ராக்கர்ஸ். இவர்கள் தமிழ் கன் என்ற பெயரிலும், வேறு சில பெயர்களிலும் இணையத்தில் இயங்கி வருகின்றனர்.

kaala tamil movie - tamil rockers

காலா படத்துக்கு தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட எச்சரிக்கை.

தானு தயாரிப்பில், ரஜினி நடித்த கபாலி படம் வெளியான போது, ‘கபாலி படத்தை தமிழ் ராக்கர்ஸில் வெளியிடுவதை முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று சவால் விட்டு, படம் வெளியான அன்றே இணையத்தில் வெளியிட்டனர். தயாரிப்பாளர் தரப்பு புகார் செய்து, தமிழ் ராக்கர்ஸை தடை செய்தனர். உடனடியாக வேறு வேறு வேறு பெயர்களில் இணையத்தை உருவாக்கி, படத்தை வெளியிட்டு பெரும் நெருக்கடியை கொடுத்தனர். அதே போல சமீபத்தில் வெளியான காலா படத்தையும் வெளியிடுவோம் என்று அறிவித்து, வெளியிட்டனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மெர்குரி படம், தமிழகத்தில் வெளியாகவில்லை. அப்போது தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது. எனவே வெளிமாநிலங்களில் அது வெளியானது. அதனை உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தில் வெளியிட்டு, தயாரிப்பு நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள், படத்தின் இயக்குநர் மோகன்ராஜா, ‘தமிழ் ராக்கர்ஸ் நல்ல வேலைக்காரன். நல்ல மூளைக்காரன். வேலைக்காரன் படத்தில் நடித்த பலருடைய வியர்வையை மனதில் கொண்டு தாமதமாக தமிழ் ராக்கர்ஸ் வேலைகாரனை வெளியிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். ஆனாலும் படம் வெளியான நாளிலேயே தமிழ்ராக்கர்ஸ் அதனை வெளியிட்டது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால், தமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். இதையடுத்து, தமிழ் ராக்கர்ஸ் கோபம் அவர் மீது திரும்பியது. அவரின் படம் வெளியாகும் போதெல்லாம், அதனை இணையத்தில் வெளியிட்டு அவரை வெறுப்பேற்றி வருகின்றனர்.

சென்னை போலீசார், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கவுரி சங்கர் என்பவரை கைது செய்தனர். அவர் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தின் அட்மின் என்று சொல்லப்பட்டது. அவர் கைதான அன்று வெளியான விஷாலின் துப்பறிவாளன் படமும் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டது. அதன் பின்னர் அவருக்கும் தமிழ் ராக்கர்ஸ்க்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. அதே போல கோவையிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போதும் தமிழ் ராக்கர்ஸின் அடாவடி அடங்கவில்லை.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி தமிழக சட்டசபையில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், ‘தமிழ் ராக்கர்ஸை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து முடக்க வேண்டும்.’ என கோரிக்கை வைத்தார். அந்த அளவுக்கு தமிழ் ராக்கர்ஸின் அட்ராசிட்டி உள்ளது.

இதே போல பலூன் படத்தின் இயக்குநர் சினிஷும் தமிழ் ராக்கர்ஸ்க்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் ராக்கர்ஸ் யார்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்ட போது, ‘‘தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனி நபர் நடத்துவதல்ல. அதுவும் தமிழகத்தில் இருந்து அவர்கள் நடத்தவில்லை. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் திரைப்படங்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகும் படங்களையும் வெளியிடுகிறார்கள். எனவே அவர்களின் ஆதரவாளர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்.

அட்மின்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு இணையத்தை முடக்கினால் வேறு பெயரில் முளைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் எங்களால் முடிந்த வரையில், அனுமதியில்லாமல் வெளியாகும் படங்களை ஒளிபரப்பும் இணையதளங்களை முடக்கி வருகிறோம்’’ என்றனர்.

தமிழ் ராக்கர்ஸின் பல்வேறு பெயர்கள் :

Tamilrockers .cc
Tamilrockers .to
Tamilrockers .be
Tamilrockers .pm
Tamilrockers .ws
Tamilrockers .lu
Tamilrockers .la
Tamilrockers .ac

சில மாதங்களுக்கு முன்பு, தமிழ் ராக்கர்ஸ்க்கும், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கும் தொடர்பு இருப்பதாகவும், தமிழ்ராக்கர்ஸிடம் பணம் பெற்றுக் கொண்டு விஷால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பரபரப்பாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை உடனடியாகவே விஷால் மறுத்தார்.

தமிழ் திரையுலகின் மாயாவியாக வலம் வரும் தமிழ் ராக்கர்ஸ் போலீசாருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close