இந்திப் படங்கள் ஏன் அதிகளவில் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன?
இந்தியிலிருந்து தமிழுக்கு ரீமேக்கான, ரீமேக் ஆகப்போகும் படங்களின் பட்டியலை எடுத்தால் ஏறக்குறைய அனைத்தும் நாயகி மையப்படங்கள் என்பதை அறியலாம்.
பாபு
இந்தி மொழிப் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் ரீமேக் செய்யப்படுவதும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்கள் இந்தி உள்பட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதும் காலங்காலமாக நடந்துவரும் செயல்பாடு. சிவாஜி காலம்தொட்டு இந்திப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன. ராஜா (ஜானி மேரா நாம்), எங்கிருந்தோ வந்தாள் (கிலோனா), சங்கிலி (காளிசரண்) சில உதாரணங்கள்.
ரஜினி நாயகனான பிறகு அமிதாப்பச்சனின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அமிதாப்பச்சனின் டான் (பில்லா), திரிசூல் (மிஸ்டர் பாரத்), கஸ்மி வாதி (தர்மத்தின் தலைவன்), நமக் கல்லால் (வேலைக்காரன்), குத் தார் (படிக்காதவன்), மர்ட் (மாவீரன்) உள்பட ஏராளமான படங்கள் ரஜினி நடிப்பில் ரீமேக்காயின. ரஜினியின் அண்ணாமலை படம்கூட குட்கர்ஸ் இந்திப் படத்தின் தழுவலே.
அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்திப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது சமீபத்தில் குறைந்தது. யுடிவி தமிழில் படம் தயாரிக்க ஆரம்பித்தபின், அவர்கள் இந்தியில் தயாரித்த சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. கண்டேன் காதலை, சேட்டை படங்களை உதாரணமாகச் சொல்லலாம். சல்மான் கானின் தபாங் தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தியாக வெளியானது.
தற்போது மீண்டும் அதிகளவில் இந்திப் படங்களில் தமிழில் ரீமேக் ஆகின்றன. இவற்றைப் பார்த்தால் ஓர் உண்மையை அறிந்துகொள்ள முடியும். இந்தியில் நாயகி மையப் படங்கள் வெற்றிபெறத் தொடங்கியதே இதற்கு பிரதான காரணம். நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் நாயகி மையப்படங்களில் நடிக்க ஆரம்பித்தது துணைக்காரணம்.
கஹானி
வித்யா பாலன் நடிப்பில் வெளியான இந்திப் படம். கர்ப்பிணியான பெண் ஒருத்தி கொல்கத்தாவில் தனது கணவனைத் தேடி வருகிறாள். அவன் கொல்கத்தா வந்த இடத்தில்தான் காணாமல் போனான். அவளது தேடல் தேசத்துக்கு எதிராக நடந்த மிகப்பெரிய தாக்குதலுடன் தொடர்புடையது என கண்டுபிடிக்கிறாள். அவளை ஒரு தூண்டிலாக்கி தேசத்துரோகிகளை கண்டுபிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் முயல்கின்றனர். ஆனால், தூண்டில் அவள் அல்ல போலீஸ்தான் என்பது அதிர்ச்சியளிக்கும் கிளைமாக்ஸ்.

ஹகானி படத்தில் நடிகை வித்யா பாலன்
இந்தியில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தை நயன்தாராவை வைத்து தெலுங்கு, தமிழில் சேகர் கம்முலா இயக்கினார். தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் படம் வெளியாகி இரண்டு மொழிகளிலும் தோல்வியடைந்தது. கஹானியில் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்திருந்தார். அது அப்படத்தின் கதைக்கும், அவரது கதாபாத்திர நம்பகத்தன்மைக்கும் பெரும் வலுவாக அமைந்தது. அந்த ஆணிவேரை பிடுங்கி, நயன்தாராவை சாதாரணமாக இயக்குனர் காட்டியிருந்தார். படத்தின் தோல்விக்கு அது முக்கிய காரணமானது. இந்தப் படத்தின் விளம்பரங்களில் கலந்து கொள்ளவில்லை என்றுதான் நயன்தாராவுக்கு தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதித்தனர்.
நில் பேட்டி சன்னட்டா
பள்ளியில் படிக்கும் மகளை மோட்டிவேட் செய்வதற்காக வீடுகளில் வேலை செய்துவரும் தாய், மகளுடன் சேர்ந்து பள்ளியில் படிக்கும் கதை. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் சார்பில் தமிழில் ரீமேக் செய்தார். அமலா பால் நாயகியாக நடித்தார். இதுவும் நாயகி மையப்படமே.
குயின்
கங்கனா ரனவத் நடிப்பில் வெளியான குயின், கட்டுப்பெட்டியாக வசித்துவந்த ஒரு பெண், தனது திருமணம் தடைபட்டதுடன், தேனிலவுக்கு வெளிநாடு செல்வதற்காக வாங்கி வைத்திருந்த டிக்கெட்டுடன் தனியாக வெளிநாடு கிளம்பிச் சென்று, சுதந்திரமான பெண்ணாக மாறுவதை சொன்னது. இந்தியில் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தற்போது தமிழ் உள்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்கின்றனர். காஜல், தமன்னா, மஞ்சிமா மோகன் ஆகியோர் ஒவ்வொரு மொழியிலும் கங்கனா ரனவத்தின் வேடத்தில் நடிக்கின்றனர்.
என்ஹெச் 10
அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்த படம், என்ஹெச் 10. இதுவும் நாயகி மையப்படம். கணவனுடன் வெளியூர் செல்லும் நாயகி ஒரு வழியோர மோட்டலில் ஒரு வன்முறை கும்பலை சந்திக்கிறாள். அவர்களை பின்தொடர்கிறாள். தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனை திருமணம் செய்ததற்காக அப்பெண்ணின் சகோதரர்கள் மற்றும் மாமாவே அவர்கள் இருவரையும் அடித்து உதைத்து விஷம் கொடுத்து கொல்வதை பார்கிறாள். அந்த சாதி வெறியர்கள் நாயகியை துரத்துகிறார்கள். காயம்பட்ட கணவனை ஓரிடத்தில் விட்டுவிட்டு உதவி கேட்டு காவல்நிலையத்துக்கு வருகிறாள். அவரும் ஒரு சாதி வெறியர். எப்படி அம்பேத்கரின் சட்டமோ அதேபோல் சமூகத்துக்கு மனுதர்மம் என்று அவர் பாடம் நடத்துகிறார். கடைசியில் கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் நாயகி தஞ்சமடைகிறாள். அந்த வீட்டு பெண்தான் சாகடிக்கப்பட்டாள். அவளை சாகடிக்கச் சொன்னது அவளது அம்மா என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து நாயகியால் தப்பிக்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

கர்ஜனை படத்தில் நடிகை த்ரிஷா
இந்தியாவில் மனுதர்மமும் அதன் கழிவான சாதியும் எப்படி புரையோடிப் போயுள்ளது என்பதை சொன்ன முக்கியமான படம் இது. இந்த கருத்தைத் தவிர்த்து படத்தின் பின்னணி வன்முறைக் காட்சிகள் ஈடன் லேக் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். என்ஹெச் 10 படத்தை த்ரிஷா நடிப்பில் கர்ஜனை என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.
தும்கரி சுலு
வித்யா பாலன் நடிப்பில் சென்ற வருடம் வெளியான தும்கரி சுலு திரைப்படம் ஜோதிகா நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ராதாமோகன் படத்தை இயக்குகிறார். படிப்பை பாதியில்விட்ட ஹவுஸ் ஒய்ஃபான வித்யா பாலனுக்கு வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை. படிப்பை முடிக்காததால் எந்த வேலைக்கும் அவரால் செல்ல முடியாமல் போகிறது. கடைசியில் ரேடியோ ஜாக்கியாக அவர் தேர்வாகிறார். 36 வயதினிலே போன்று பெண்களை மோட்டிவேட் செய்யும் படம் இது. படத்தின் நாயகன் நாயகி எல்லாம் வித்யா பாலனே.

நடிகை ஜோதிகா
சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழுக்கு ரீமேக்கான, ரீமேக் ஆகப்போகும் படங்களின் பட்டியலை எடுத்தால் ஏறக்குறைய அனைத்தும் நாயகி மையப்படங்கள் என்பதை அறியலாம். சமீபத்தில் திரைக்கு வந்த அனுஷ்கா சர்மாவின் பேய் படம் பாரியும் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதுவும் நாயகி மையப்படமே. நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.
இந்தியில் நாயகி மையப்படங்களுக்கு ஏற்பட்ட மறுமலர்ச்சி தமிழிலும் பரவியிருக்கிறது. இதுவொரு நேர்மறையான வளர்ச்சி.
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.