Advertisment

நாங்க ஏன் போராட்டத்துக்கு வரலை...? - அஜித், நயன்தாரா, த்ரிஷாவிடம் கற்பனை பேட்டி

நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற அரைநாள் அடையாள போராட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர் அஜித், நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வாலிடம் கற்பனை பேட்டி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor - actress

பாபு

Advertisment

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடின்னா, நடிகர்களுக்கு நாலாப்பக்கம் இடி. போராட்டம் நடத்தலைன்னா, 'தமிழ்நாட்ல கோடி கோடியா சம்பாதிச்சிட்டு பிரச்சனைன்னு வந்தா கம்முன்னு இருக்கானுங்க பாரு' என்பார்கள். போராட்டம் நடத்தலாம் என்றால், அரசாங்கம் அரை நாள் பண்ணிக்கோ, அரை மணிநேரம் பண்ணிக்கோ என்கிறது. அப்படித்தான் ஒருநாள் போராட்டம் அரை நாளாகச் சுருங்கி இப்போது அவனவன் வாயில் அரைபடுகிறது. 'டிபனுக்கும் லஞ்சுக்கும் நடுவுல அதென்ன போராட்டம்?'

சரி, போராடுவோம்னு வள்ளுவர் கோட்டத்துக்கு வந்தாலும் பிரச்சனை. 'மவுனப் போராட்டம்னு சொல்லிட்டு குசுகுசுன்னு பேசிட்டிருக்கிறதைப் பாரு' என்பார்கள். 'முகத்துல ஒரு கவலை தெரியுதா' என்று நாடி பிடிப்பார்கள். ஏதோ இவங்க காவிரிக்காக வீட்ல ஒப்பாரி வச்சிட்டு இருக்கிற மாதிரி. இந்த பிரச்சனையெல்லாம் எதுக்குன்னு வீட்ல இருந்தாலும் வீதியில இழுத்துப் போட்டு அடிப்பாங்க. 'அவ்வளவு பேரு வந்தாங்க, வீட்ல சும்மாதானே இருக்கான், வந்து தலையை காட்டிட்டு போறதுதானே?'

சரி, தலையை காட்டிட்டு வரலாம்னா, 'நாலு மணிநேர போராட்டம், அதுகூட முழுசா இருக்காம இரண்டு மணிநேரம் இருந்திட்டு ஓடிட்டாங்க' என்பார்கள்.

போராட்டத்தில் அஜித், நயன்தாரா, தமன்னா, காஜல், த்ரிஷா என்று மெயின் தலைகள் அனைத்தும் ஆப்சென்ட். ஏன் போராட்டத்துக்கு வரலை என்று காரணம் கேட்டால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும்? ஒரு கற்பனை கலாய்.

அஜித்

ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டதும் அஜித்தின் தலை ஸ்..லோ..மோ...ஷ...னி...ல்.. உதவியாளர் பக்கம் திரும்புகிறது.

உதவியாளர் : "சார் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறது இல்லைங்கிறதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்கார்."

கேள்வி : "ஆனாலும் இது மக்கள் பிரச்சனையில்லையா?"

அஜித்தின் தலை இப்போதும் ஸ்..லோ..மோ...ஷ...னி...ல்.. உதவியாளர் பக்கம் திரும்ப,

உதவியாளர் : "அதான் சார் கொள்கை முடிவுன்னு சொல்லிட்டோமில்லை."

கேள்வி : "ஜெயலலிதா இறந்தப்போ நினைவிடத்துக்குப் போனாரே...?"

மீண்டும் ஸ்லோமோஷன்.

உதவியாளர் : "சாரோட பர்சனல் விஷயம் அது. அதுவும் ஜெயலலிதா மேடம்க்கு மட்டும்தான்."

கேள்வி : "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தட்டிக்கழிக்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"

இந்தமுறை அதிசயமாக அஜித்தே பதிலளிக்கிறார்.

அஜித் : "அதுவொரு கறுப்பு சரித்திரம்..."

கேள்வி : (குஷியாகி) "சூப்பர்ஜி. தமிழ்நாட்டுக்கே அது கறுப்பு சரித்திரம்தான். அப்புறம்..."

அஜித் : "அவர்கள் பிள்ளைகள், மனைவிகள், மகள்கள், சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி, மருமகள், மருமகன்னு எல்லோருடைய ரேஷன் கார்டையும் பறிமுதல் செய்யணும்..."

கேள்வி : "சூப்பர் சூப்பர்ஜி... (திடீரென்னு குழம்பி) ஜி நீங்க யாரைச் சொல்றீங்க. மத்தியில இருக்கிறவங்களையா, மாநிலத்தில் இருக்கிறவங்களையா?"

உதவியாளர் : (இடைமறித்து) "சார் நீங்க கிளம்புங்க."

கேள்வி : (திடீரென்று புரிந்து) "ஜி... இது சிட்டிசன் டயலாக் இல்லையா?"

உதவியாளர் : "ப்ளீஸ் வெளியே வாங்க..."

வலுக்கட்டாயமாக அறைக்கு வெளியே அழைத்து வருகிறார்.

உதவியாளர் : "என்ன சார் நிலைமை புரியாம. சிட்டிசனுக்கு அப்புறம் லெந்தியா டயலாக் பேசி சார் எந்தப் படத்துலயாவது நடிச்சிருக்காரா? மொத்த படத்துக்கே ரெண்டு பக்கம்தான் டயலாக். இதுல அவரைப் போய் பேட்டி போட்டின்னு பேசச் சொல்றீங்க. கிளம்புங்க சார்."

நயன்தாரா

நயன்தாரா : "நான் ஏன் வரணும்? பட பப்ளிச்சிட்டிக்கு அஜித் வர்றாரா? நானும் வர்றதில்லை. போராட்டத்துக்கு அஜித் வந்தாரா? நானும் வரலை. ரோட்ல உட்கார்ந்திட்டு போற வர்றவனெல்லாம் வேடிக்கைப் பார்க்கிறதுக்கு. சேசே..."

கேள்வி : "ஆனா இது காவிரி..."

நயன்தாரா : (பேச விடாமல் இடைமறித்து) "காவிரி எனக்கு யாரு? அவங்க பர்த்டேக்கு நான் ஏன் வரணும்? (குரல் குழைகிறது) விக்னேஷ் சிவன் பர்த்டேன்னா சொல்லுங்க. வள்ளுவர் கோட்டம் என்ன பிளைட் பிடிச்சு லாஸ் ஏஞ்சல்ஸே வர்றேன்."

கேள்வி : "காவிரிங்கிறது தண்ணிப் பிரச்சனை..."

நயன்தாரா : "வாட்? தண்ணி...? ஐ ட்ரிங்க் ஒன்லி மினரல் வாட்டர். ஓகே இவ்வளவு சொல்றீங்க. நெக்ஸ்ட் டைம் டைம் இருந்தா வர்றேன். அப்புறம், ஹேர் ட்ரெஸ்ஸிங், மேக்கப், டச்சிங்குக்கு மும்பையிலயிருந்து வருவாங்க. அவங்களுக்கு பிளைட் டிக்கெட், கிரீன் பார்க்ல ரூம், பேமெண்ட் எல்லாம் நீங்க பார்த்துக்குங்க.... ஹலோ பேசிட்டிருக்கும்போது ஏன் ஓடறீங்க...?"

த்ரிஷா

த்ரிஷா : "ஆக்சுவலி இதுல கலந்துக்கிறதுக்காக ஹைதராபாத்லயிருந்து பிளைட் பிடிச்சி சென்னை வந்தேன். ஐ லவ் டமில். நானும் ஒரு தமிழச்சிதானே."

கேள்வி : "அப்புறம் ஏன் கலந்துக்கலை?"

த்ரிஷா : "ஓ... சென்னை ட்ராபிக் ஹாரிபிள். வீட்லயிருந்து வள்ளுவர் கோட்டத்துக்கு பிளைட் இருந்திச்சின்னா நல்லாயிருந்திருக்கும். இல்லியா மம்மி...?"(த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் தலையசைக்கிறார்)

கேள்வி : "ட்ராபிக்தான் நீங்க வராததுக்கு காரணமா?"

த்ரிஷா : "போராட்டத்துல போடுறதுக்காக ஸ்பெஷலா இத்தாலிலேர்ந்து ஒரு கூலிங் கிளாஸ் இம்போர்ட் பண்ணுனேன். பட் ஐ லாஸ்ட் இட்... ஓ நோ..."

த்ரிஷா குலுங்கி அழ, அம்மா சமாதானப்படுத்துறார்.

கேள்வி : (தயங்கி) "உங்ககிட்ட வேற கூலிங் கிளாஸ் இல்லியா?"

த்ரிஷா : "எஸ்...ஐ ஹேவ். டஜன் கணக்குல இருக்கு பட்..."

கேள்வி : "அப்புறம் என்ன?"

த்ரிஷா : "மம்மி..."

உமா கிருஷ்ணன் : "ஏம்பா புரியாம பேசுற. அதெல்லாம் இதுக்கு முன்னாடி நடந்த போராட்டத்துல போட்டுகிட்டது. ஏற்கனவே போட்டதை எப்பிடி போடுறது? அதுக்காகத்தான் இத்தாலியிலயிருந்து புதுசா இம்போர்ட் பண்ணோம். ஓ பேபி... அழாத உன் பிறந்த நாளுக்கு நல்ல தெருநாயா பார்த்து பிரசன்ட் பண்றேன்.... "

காஜல் அகர்வால்

காஜல் : "ம்;... ஆக்சுவலி ஐயாம் நாட் ப்ரம் டமில்நாடு. பட் ஐ லவ் டமில்... ம்... ஐ லவ் டமில் பீப்பிள்ஸ் (சம்பந்தமில்லாமல் சிரிக்கிறார்) ம்;. என்ன சொன்னீங்க...? ம்... காவ்ரி... சின்ன வயசுல நான் நாலாம் வகுப்பு படிக்கிறப்போ எங்க வீட்ல காவ்ரின்னு ஒரு மெய்ட் இருந்தாங்க. நான் வாட்டர் கேட்டா மம்மியில்லாதப்போ அவங்கதான் கொண்டு வந்து தருவாங்க. தட்ஸ் ஒய் ஐ ரிமம்பர் காவ்ரி... ஐ லவ் காவ்ரி... தாங்க்யூ பார் வாட்சிங் மை இன்டர்வியூ. ஃபார் மை ஆல் ஃபேன்ஸ், வெரி வெரி ஹேப்பி காவ்ரி டே விஷ்ஷஸ்."

இதற்கு மேல் கேட்கிற பொறுமை தமிழர்களுக்கு இருக்காது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment