ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் பாகுபலி-2 படத்தின் பிரம்மாண்டமும், எதிர்பார்ப்பும்

வெறும் ஈயை வைத்துப் பிரம்மாண்டம் காட்டிய ராஜமெளலி தனது கடும் உழைப்பில் உருவாக்கிய பாகுபலி படம்தான் இந்த வாரம் இந்தியா முழுவதும் சினிமா உலகத்தையே பெரும்...

தண்டாயுதபாணி

வெறும் ஈயை வைத்துப் பிரம்மாண்டம் காட்டிய ராஜமெளலி தனது கடும் உழைப்பில் உருவாக்கிய பாகுபலி படம்தான் இந்த வாரம் இந்தியா முழுவதும் சினிமா உலகத்தையே பெரும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறது. தள்ளாடும் தமிழக அரசியல், கொளுத்தும் வெயில், பாஜகவின் அதிரடி நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் மறந்து மக்கள் ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருக்கிறார்கள்.

பல நாள் கனவு

பாகுபலி முதல் பாகத்தில் ரசிகர்களைச் சிலிர்ப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் க்ளைமேக்ஸில் பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்து இரண்டு வருடமாக அடுத்த பாகத்துக்கு காத்திருக்க வைத்திருந்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தன்னுடைய ஏழு வயதில் அமர்கவசித்ரா என்ற கதையைக் கேட்டு வளர்ந்த ராஜமெளலியின் பல நாள் கனவில் உருவாகி இருக்கிற படம்தான் பாகுபலி. பாகுபலி-2-க்கு அவருடைய தந்தை கதை எழுதி இருக்கிறார்.

பிரபாஸுக்கு இது மிக முக்கியமான படம். 5 வருஷத்தை இதற்காக பிரபாஸ் முழுமையாகக் கொடுத்துள்ளார். இதற்காக உடல் வாகைக் கூட்டி, வாள் குதிரைப் பயிற்சிகளைக் கற்று தயாராகியிருக்கிறார். ராணாவும் இதற்காக பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருமே பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். முக்கியமாக இதில் பெயர் குறிப்பிட்டு வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே கதையை ஏதோ ஒருவகையில் நகர்த்திச் செல்வதாகவே உள்ளன.

விஷுவல் எஃபெக்ட்ஸில் கலக்கி இருக்கிறார்கள். பாகுபலி ஒன்று ஏற்படுத்தியிருக்கிற எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ராஜமெளலி. எங்கே ட்விஸ்ட் வைக்கணும், எங்கு லிங்க் பண்ணனும் என்பதை பக்காவாகத் திட்டமிட்டு திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்.

கதைப் போக்கும் பாத்திரங்களும்

கட்டாப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்விதான் இரண்டாம் பாகத்துக்கு நம்மை இழுப்பதாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் அதையெல்லாம் தாண்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பாகத்தில் பெரிதாக தமன்னாவும், பிரபாஸும் (மகேந்திர பாகுபலி) காதலைப் பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் பிரபாஸ் (அமரேந்திர பாகுபலி), அனுஷ்கா இடையிலான காதல் இந்த பாகத்தில் முக்கியமான இடம்பெற இருக்கிறது என்பது கூடுதல் ப்ளஸ்.

ராணாவுக்கும் தந்தை மற்றும் மகன் பாகுபலிகளுக்கு இடையிலான மோதல்களின் இறுதிக்கட்டமும் இரண்டாம் பாகத்தில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் க்ளாடியேட்டர், ட்ராய், 300 ஸ்பார்ட்டன்ஸ் பார்த்து சிலிர்த்து போன நமக்கெல்லாம் நம் மண்ணிலேயே அப்படி ஒரு படைப்பு உருவாக்கப்பட்டு காணக்கிடைப்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்.

ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் பாகுபலி 2, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆனால் ரிலீஸுக்கு முன்பே இப்படம் ரூ. 438 கோடி வரை வசூலித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாட்டிலைட் உரிமை, அந்தந்த மாநிலங்களில் திரையிடல் உரிமை, விளம்பரங்கள், சர்வதேச திரையிடல் உரிமை என இதுவரை பாகுபலி ஈட்டிய தொகையே ரூ. 438 கோடி ஆகும். இந்தியாவில் மட்டுமே 6,500 திரையரங்கங்களில் வெளியாகிறது. பெங்களூரில் காலை மணி காட்சிக்கு ரூ. 600 டிக்கெட் கட்டணத்துக்குப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

குவியும் சாதனைகள்

பாகுபலி 2, பாகுபலி முதல் பாகத்தின் ரெக்கார்டையெல்லாம் முறியடித்துக்கொண்டிருக்கிறது. நான்கு மொழிகளின் ட்ரெய்லர்களும் பல கோடி வியூக்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கின்றன. பாடல்களும் வைரல்கள்தான். இதுமட்டுமல்லாமல் பாகுபலி என்ற தலைப்பில் எந்த விடியோவைப் பதிவு செய்தாலும் வியூக்கள் அள்ளுகின்றன.

முக்கியமாக பாகுபலி என்பது பொழுதைப் போக்கும் படம் மட்டுமல்ல. கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவே படம் முழுவதும் இருந்தாலும் நட்பும், காதலும், நம்பிக்கையும், துரோகமும், வெற்றியும் கலந்த இந்தப் படைப்பு உண்மையிலேயே இந்தியர்கள் பெருமைப்படத்தக்க பிரம்மாண்ட படைப்புதான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close