திமுக ஆட்சியில் தமிழ்மொழியை வளர்க்கும்(?) நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது திரைப்படங்களுக்கான வரிவிலக்கு. முதலில் தமிழில் டைட்டில் வைக்கப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு என்பது பின்னர் அதிமுக ஆட்சியில் தமிழ் டைட்டிலோடு தமிழ் கலாசாரத்தையும் தாங்கி பிடிக்க வேண்டும். யு சர்டிஃபிகேட் வாங்கியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விளைவு மாசு ஆன மாஸ், ப.பாண்டி ஆன பவர் பாண்டி என பல கொடுமைகளை பார்க்க வேண்டிய சூழலுக்கு ஆளானோம். சும்மாவா? வசூலில் 30 சதவீதம் வரிக்கு போய்விடுமே என்று ரெமோவையெல்லாம் தமிழ் பெயர் வரிசையில் சேர்த்தனர். அரசியல் காழ்ப்புணர்வால் உதயநிதி வைத்ததால் மனிதன் என்ற வார்த்தையே தமிழில் இருந்து தூக்கப்பட்ட காமெடியும் நடந்தேறியது.
இந்த காலக்கொடுமைகளுக்கு இதுதான் க்ளைமாக்ஸ். வரும் ஜுலை 1 முதல் ஜிஎஸ்டி வரிக்குள் வருகிறது தமிழ் சினிமா. எனவே இனி வரிவிலக்கு கிடையாது. இன்று ரிலீசாகும் படங்களில் வனமகனுக்கு வரிவிலக்கு கிடைத்து விட்டது. ஏஏஏ படம் யு/ ஏ என்பதால் வரிவிலக்கு கிடையாது.
இனி வரிவிலக்கு கிடையாது என்பதால் ஜுலைக்கு பின் ரிலீஸாகும் படங்களில் என்ன மொழியில் வேண்டுமானாலும் டைட்டில் இருக்கலாம். ஸ்பைடர், மெர்சல் என்று இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது. அப்படியே த்ரிஷா இல்லனா நயன் தாரா மாதிரியான படங்களும் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.