நடிகர் சங்கப் பொதுக்குழுவை முன்னணி நடிகர்கள் புறக்கணித்தது கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. ‘கமலுக்கு காய்ச்சல்... மற்றவர்களுக்கு என்னாச்சு?’
நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமை தாங்க, செயலாளர் விஷால் முன்னிலை வகித்தார். 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நடிகர் சங்கத்தில், சூர்யாவைத் தவிர வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க கட்டிட பூஜையில் கூட ரஜினி, கமல் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களும் வரவில்லை. அவர்கள் மட்டுமல்ல, விஜய், அஜித், தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என எந்த முன்னணி நடிகருமே இதில் கலந்து கொள்ளவில்லை. அவ்வளவு ஏன்... விஷாலுக்கு நெருக்கமான ஆர்யா, ஜீவா, விஷ்ணு விஷால் போன்றவர்கள் கூட பொதுக்குழுவில் கலந்து கொள்ளாததும், ஒரு முன்னணி நடிகை கூட இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதும் மிகப்பெரும் சோகம்.
ஏன் இவர்கள் கலந்து கொள்ளவில்லை? நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சோனியா போஸிடம் ‘ஐஇ தமிழ்’க்காக பேசினோம்.
“மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில், பொதுக்குழுவில் எல்லா நடிகர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி. அன்றைய தினம் 100 சதவீதம் எல்லா நடிகர்களும் கலந்து கொள்வார்கள். இங்கும் அதுபோன்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதுவும் நாங்கள் பதவிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களாகத்தான்.
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்புவது போலவே, பொதுக்குழுவுக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பியிருக்கிறோம். சென்னையில் இருந்தால் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னோம். ஆனால், பெரும்பாலான நடிகர்களுக்கு வெளியூரிலும், வெளிநாட்டிலும் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. கலந்து கொள்ள முடியாது என்ற தகவலை பெரும்பாலானவர்கள் எங்கள் அலுவலகத்துக்குத் தெரிவித்துவிட்டனர்.
முன்பெல்லாம் மீட்டிங்கில் போடும் சாப்பாட்டுக்காக மட்டுமே ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மட்டும் பொதுக்குழுவில் கலந்து கொள்வார்கள். ஆனால், நாங்கள் நல்லது செய்வோம் என இப்போது எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால், கொஞ்சம் கொஞ்சமாக மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று மீட்டிங் நடந்த காமராஜர் அரங்கத்தில், இருக்கை போதாமல் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது.
இளைய நடிகர்களைவிட, வயதான நடிகர் - நடிகைகள் இந்த பொதுக்குழுவில் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரைப் பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியுடன் அடுத்தவர்களைப் பற்றி நலம் விசாரித்துக் கொள்கின்றனர். வருகின்ற காலங்களில், இளைஞர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு குடும்ப விழா போலவே இந்த மீட்டிங்கை நடத்த ஆசைப்படுகிறோம்” என்கிறார் சோனியா போஸ்.
இவர் சொல்கிற காரணங்கள் ஏற்றுக் கொள்வது போல இருந்தாலும், எல்லா நடிகர் - நடிகைகளுமே ஷூட்டிங்கில் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.