பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்காக சமீபத்தில் 7-வது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் தேசிய விருது வென்றார். இந்நிலையில், தான் வென்ற விருதுகள், தன் எதிர்கால திட்டங்கள் குறித்த பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Why music icon AR Rahman feels his seventh National Film Award is like his first
குறிப்பாக அண்மையில் வென்ற தேசிய விருது தங்களுக்கு என்ன உணர்த்துகிறது என ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்பப்பட்டது .அதற்கு பதிலளித்த அவர், ரோஜா திரைப்படத்திற்காக முதன்முறையாக தேசிய விருது வாங்கிய போது, உங்கள் கலைப்பயணத்தில் இந்த விருது மிக விரைவாக கிடைத்துள்ளதாக உணர்கிறீர்களா என ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டி, அந்த விருது மேலும் தான் நெடுந்தூரம் பயணிக்க வேண்டுமென உணர்த்தியதாக கூறியுள்ளார். அதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக அண்மையில் தேசிய விருது வாங்கிய போது, தான் முதல் முறை அதனை பெறுவது போன்று உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இசை புதுப்புது பரினாமங்களை பெறுகிறது என்றும், தானும் புதிதாக பலவற்றை கற்றுக் கொண்டு வருவதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா வரலாற்றில் ரோஜா திரைப்படம் தனியிடம் பெற்றுள்ளது எனவும், அப்படத்தில் பணியாற்றியது குறித்து நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா எனவும் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. "அந்த காலகட்டத்தில் பல முயற்சிகள் மேற்கொண்டும், எந்தவொரு முன்னேற்றமும் இன்றி இருந்தது. அந்த சூழலில் ஜென் மனநிலையில் இருந்தபடி இசையின் மீது முழுக்கவனத்தையும் செலுத்திய போது தான் ரோஜா திரைப்படத்தில் பணியாற்ற மணிரத்னம் வாய்ப்பு வழங்கினார்" என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் போன்று சவாலான திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்த கேள்விக்கு, "பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றனர். இயக்குநர் மணிரத்னம் கூட இதற்காக 10 ஆண்டுகள் முயற்சி செய்து பின்னர் அதனை கைவிட்டார். ஆனால், கொரோனா தொற்றின் காலத்தில், இப்படத்திற்கான பணியை அவர் தொடங்கி விட்டார். அந்த சமயத்தில் சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அது எனக்கு உத்வேகம் அளித்தது. இப்படத்திற்கு இசையமைத்தது சிறந்த அனுபவமாக அமைந்தது. இப்படத்திற்காக பல அடுக்குகளில் இசையமைத்தோம்" என ரஹ்மான் பதிலளித்தார்
வரலாற்று திரைப்படங்களில் பணியாற்றும் அனுபவம் குறித்த கேள்விக்கு, "1950 மற்றும் 1960-களில் வெளியான இசை, கவிதை மற்றும் திரைப்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இன்று வரை அதிலிருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. மக்கள் பல விஷயங்களை ஆத்மார்த்தமாக அணுகுகின்றனர். அந்த மாதிரியான வாய்ப்புகள் வரும் போது, அவற்றை நாம் இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். மதன் மோகன், நௌஷத், லதா மங்கேஷ்கர் ஆகியோர் உருவாக்கியதை நம்மால் மீளுருவாக்கம் செய்ய முடியாது. ஆனால், அதற்கு நாம் மரியாதை செலுத்த முடியும். மேலும், இதற்காக ஆராய்ச்சி செய்வது நல்ல அனுபவத்தை கொடுக்கும். அதன் மூலம் நாம் இழந்த பல அழகியல்களை அறிய முடியும்" எனக் கூறினார்.
காந்தி குறித்த வெப் சிரீஸ், லாகூர் 1947, ராயாமணம் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் பணியாற்றுகிறீர்கள் என்ற கேள்விக்கு, வித்தியாசமான கதைக்களங்கள், நம்மை வித்தியாசமாக ஊக்குவிக்கும். உதாரணமாக, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் போன்றோர் இணைந்துள்ள தக் லைஃப் திரைப்படத்திற்கு புதுமையான இசை தேவைப்படுகிறது. இதேபோல் மராட்டிய அரசர் ஷம்பாஜி குறித்த சாவா என்ற படத்திலும் பணியாற்றுகிறேன். எனவே, மராட்டிய கலாசாரத்தை சினிமாவுக்கு ஏற்றார் போல் எவ்வாறு இசை வடிவில் உருவாக்க முடியும் என்பது தான் கேள்வியாக இருக்கும். அதன் ப்ரோமோ வீடியோவை பார்த்தால், அதன் கதாபாத்திரத்திற்கு இசை பொருத்தமானதாக இருக்கும். ஆனால், அதன் சத்தம் என்னவென்று உங்களால் கணிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
ஒரு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு சேர்ந்த மாதிரி பணியாற்றும் போது, அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமா என ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "இசைமைப்பாளராக நாம் அவ்வாறு பணியாற்ற வேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாடல்களுக்கு இசையமைப்பதை காட்டிலும் பின்னணி இசைக்காக எட்டு மடங்கு கூடுதல் நேரம் மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது. எனினும், இரண்டிலும் பணியாற்றுவது எனக்கு பிடித்தமான ஒன்று" எனக் கூறினார்.
பின்னணி இசை கதை சொல்வதற்கு உதவியாக இருந்தாலும், சமீபத்தில் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, "பின்னணி இசை சரியான முறையில் அமைக்கப்படாமல், அதனை அதிகமாக வைக்கும்பட்சத்தில் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும். இசையின் இயக்கவியலில் மூன்று நிலைகள் உள்ளன. அனைத்தையும் அதிகமாக நாம் வைக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
மேலும், மணிரத்னம், இம்தியாஸ் அலி மற்றும் இர்ஷாத் காமில் போன்றோருடன் தொடர்ந்து பணியாற்றுவது ஊக்கமளிக்கும் எனக் குறிப்பிட்ட ஏ.ஆர். ரஹ்மான், இவர்களுடன் பணியாற்றுவது தனது சுமையை குறைக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களால் செய்ய முடியாத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்றுவது நமது சுமையை அதிகரிக்கும் வகையில் அமையும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நாகாலாந்து தொடர்பான ஆவணப்படத்தில் பணியாற்றியது குறித்து ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கு அதன் தனித்துவமான இசை, மொழி, நடனம், உணவு முறை உள்ளிட்டவை உள்ளது. இவை அனைத்தையும் நம் வாழ்நாளில் நாம் அனுபவிக்க முடியாது. அந்த வகையில், இந்த ஆவணப்படத்தில் பணியாற்றியது பெருமையாக" இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் இசைக்கலைஞராக இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுவதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். கலாசார எல்லைகளுக்கு இசை ஒரு பாலமாக அமைவதாகவும், அதனால் தான் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடல் உலக அளவில் கவனம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இசையின் மூலம் நம்மால் அனைத்தையும் செய்ய முடியும் என்பதற்கு அது ஒரு சான்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.