scorecardresearch

பாகுபலி 2, டங்கல் சாதனையை முறியடிக்க 2.0க்கு கைகொடுக்குமா?

படம் சாதாரண நாட்களில் ரிலீஸ் ஆவதால், படத்தின் கண்டெண்ட் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். தவறினால் தாக்குபிடித்து பெரிய வசூலை கொடுப்பது மிகவும் சிரமம்.

பாகுபலி 2, டங்கல் சாதனையை முறியடிக்க 2.0க்கு கைகொடுக்குமா?

செங்கோட்டையன்

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் ரிலீஸ் தேதி பல மாற்றங்களுக்கு பிறகு மீண்டும் அறிவிக்கப்படிருக்கிறது. அறிவிப்புக்கு ஒரு அறிவிப்பு, 6 மணிக்கு அறிவிப்பு, என்ன ரெடியா? என அவ்வப்போது ரசிகர்களை உசுப்பேற்றி ஒரு அறிவிப்பு என எந்தவித ஆர்ப்பாட்டமும், முன் அறிவிப்பும் இல்லாமல் வெளியான இந்த தேதி அறிவிப்பு ஒரு சில நிமிடங்களிலேயே காட்டுத்தீ போல உலகளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு ஒரு சேர மகிழ்ச்சியையும், ஆயிரம் சிந்தனைகளையும் ரசிகர்கள் மட்டுமல்லாமது சினிமா துறையினர் மற்றும் சாதாரண மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை விட, வசூல் நிலவரங்களையும், லாப நஷ்டங்களையும் பற்றி அதிகம் கவலைப்படுவது ரசிகர்கள் தான். தேதி அறிவிப்பில் கூட தயாரிப்பாளரை திட்டி தீர்க்கும் போக்கு வரை இது சென்றுள்ளது. முன்பெல்லாம் படத்தை போய் தியேட்டரில் பார்த்தோமா? கைதட்டினோமா? வந்தோமா? என்று இருந்த ரசிகர்கள் மெதுவாக வெற்றி தோல்வி பற்றி அலச ஆரம்பித்தார்கள். ரஜினி, கமல் வளர்ந்து வந்த காலத்தில் இது இன்னும் அதிகரித்தது. 100 நாள், 200 நாள் என இருந்த இந்த போட்டி, இணைய யுகத்தில் 100 கோடி, 200 கோடி என மாறியது. அதனாலேயே ரிலீஸ் தேதி, எந்த தியேட்டர் புக் பண்ணனும், எவ்வளவு வசூல் என்பது வரை ரசிகர்கள் தலையிட ஆரம்பித்தனர். 2.0 விஷயத்திலும் ரிலீஸ் தேதியை வைத்து மிகப்பெரிய விவாதங்கள் நடந்து வரும் இந்த வேளையில் இந்த கட்டுரை எழுதுவது அவசியமாகிறது.

2.0 படம் இந்தியாவின் மிக பிரமாண்டமான படம், ஹாலிவுட்டுக்கு சவால் விடும் தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டும் வரும் பணியாளர்கள் பலரும் அதன் பிரமாண்டத்தை பற்றி வியந்து கூறி வருகிறார்கள். இந்திய சினிமாவின் முதல் 1000 கோடி படமாக இருக்கும் என்று வர்த்தக உலகில் பேசப்பட்டு வந்த நிலையில் டங்கல், பாகுபலி படங்கள் அந்த சாதனையை படைத்து விட்டன. 2.0 படத்துக்கு மிகப்பெரிய பெஞ்ச்மார்க்கை வைத்து விட்டன.

ஒரு படத்தின் வசூலுக்கு நல்ல ரிலீஸ் தேதி, பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை, சூழல், தட்பவெப்பம் என எல்லாமே ஒத்துழைக்க வேண்டும். கடந்த காலங்களில் இவை எல்லாம் இல்லாமலும் சாதாரண நாட்களிலேயே மிகப்பெரிய வசூலை கொடுத்து வந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்று உறுதியாக சொல்லலாம். ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களில் படத்தை வெளியிடுவதையே விரும்புகிறார்கள். சிவாஜி, எந்திரன், கபாலி, காலா வரை எல்லா படங்களுமே சாதாரண நாட்களில் ரிலீஸ் ஆகி ரெக்கார்ட் பிரேக்கிங் வசூல் செய்த படங்கள் தான். ஆனால் 2.0 படம் மற்ற படங்களை போலல்லாமல் இந்திய சினிமாவின் மிகப்பெரிய படம், 500 கோடி முதலீடு இருக்கிறது. உலக அரங்கில் தமிழ் சினிமாவின் வீச்சை இன்னும் அழுத்தமாக பதிக்க வாய்ப்புள்ள மிக முக்கியமான படம். அதனால் தான் 2.0 ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் போதெல்லாம் ரசிகர்கள் அனைவரும் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து பதற்றத்தோடு கருத்து சொல்கிறார்கள்.

பாகுபலி படம் ரம்ஜானுக்கு முந்தைய வாரம், ஒரு சாதாரண நாளில் வெளியாகி 600 கோடிகள் வரை வசூலித்தது. அதன் வீச்சையும், அதன் எதிர்பார்ப்பையும் உணர்ந்த தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் பாகுபலி 2ஆம் பாகத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட தீர்மானித்தனர். அவர்கள் கணக்குப்படியே பாகுபலியை போலவே மூன்று மடங்கு வசூல் செய்து இந்திய சினிமாவின் உச்சபட்ச வசூல் படமாக சாதனை படைத்தது பாகுபலி 2. இன்று வரை பாகுபலி 2ன் வசூல் சுனாமியை பலரும் ஆச்சர்யத்துடன் வாய்பிளந்து பார்த்து வருகிறார்கள்.

2.0 படம் ரிலீஸில் உள்ள பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பலம்:

பாகுபலியை விட மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உடைய படம் 2.0. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஷங்கர், ஏஆர் ரகுமான் என மிகப்பெரிய காம்பினேஷன் படத்தின் மிகப் பெரிய பலம். ஏற்கனவே ரஜினி, ஷங்கர் இணைந்த இரண்டு படங்களுமே இண்டஸ்ட்ரி ஹிட்.

வட இந்தியாவின் முன்னணி ஹீரோ அக்ஷய் குமார் இந்த படத்தில் நடித்திருப்பதும், எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு ஒரு கதைக்களத்தில் படம் இருப்பது இந்தி பேசும் மாநிலங்களில் படத்தை பார்ப்பவர்களுக்கு எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாது. மக்களிடம் சரியான விதத்தில் படத்தை சேர்த்தால் மிகப்பெரிய வசூலை பெற வாய்ப்பு உள்ளது.

படம் 3டி படம், மிக பிரமாண்ட பொழுதுபோக்கு படம் என்பதால் திருட்டு விசிடியை விட, திரையரங்குக்கு சென்று படத்தை பார்க்கவே பெரும்பாலான மக்கள் விரும்புவர் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.

வெளிநாடுகளை பொறுத்தவரையில் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமா ஒவ்வொரு குறிப்பிட்ட மார்க்கெட்டில் ராஜா என்றால் தமிழ் சினிமா எல்லா ஏரியாவிலும் கில்லி. குறிப்பாக அந்த மார்க்கெட்டை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி கொடுத்த ரஜினிகாந்த் எல்லா ஏரியாவிலும் கில்லி. பிரமாண்டம் மற்றும் நல்ல கதை அமைந்தால் வசூல் சுனாமியை தடுப்பது இயலாத காரியம். தெலுங்கு சினிமா அமெரிக்காவிலும், மலையாள சினிமா அரபு நாடுகளிலும் வசூல் ராஜா என்றால் இந்தி சினிமா அமெரிக்கா, அரபு நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சக்கரவர்த்தி. இந்த அனைத்து நாடுகளோடு சேர்த்து மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை மற்றும் தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ரஜினி ராஜ்ஜியம் தான். சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த இந்திய படம் பாகுபலி 2 (296 கோடி). ரஜினியின் கபாலி வெளிநாடு வசூலே 120 கோடி, அந்த வகையில் 2.0 பாகுபலி 2 வசூலை எளிதாக கடந்து விடுவது உறுதி.

படம் 3டியில் வெளியாவதும், குழந்தைகள் விரும்பும் படமாக இருப்பதும் உலகம் முழுக்க ரசிகர்களை கவரும் என்பது மிகப்பெரிய பலம்.

நவம்பர் 29 முதல் கிருஸ்துமஸ் வரை தென்னிந்தியாவில் குறிப்பிட்டு சொல்லகூடிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாதது 2.0 படத்துக்கு பலம். நீண்ட ஓட்டத்துக்கு இது உதவும்.

பலவீனம்:

ஆந்திரா, தெலுங்கானா மக்கள் தொகை 10 கோடி. அதில் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் 7.5 கோடி மக்கள் தொகையில் 10 சதவீத மக்கள் தான் திரையரங்குக்கு சென்று படத்தை பார்க்கிறார்கள். திருட்டு விசிடியும் தெலுங்கு மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவை பெருமளவு பாதிக்கிறது. படம் 2டியிலும் வெளியாவதால் இணையத்தில் படம் பார்க்கும் கும்பலுக்கு அதுவே போதுமானதாக இருக்கும்.

படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி தள்ளி போனது படத்தின் முக்கியமான பலவீனம். படத்தின் சூட்டை ரிலீஸ் வரை அப்படியே வைத்திருப்பது கடினமான விஷயம்.

படத்தின் ப்ரமோஷன் எனப்படும் விளம்பர நிகழ்ச்சிகள், ட்ரைலர் வெளியீட்டு விழா உள்ளிட்டவற்றை திட்டமிடாமல் இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தக்க வைக்காமல் போகும்.

வாய்ப்புகள்:

இந்திய சினிமாவின் மிகப்பெரிய படம். அதுவும் ஒரு தமிழ்ப்படமாக இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை. எந்திரன் ரிலீஸின் போது அதே நாளில் வெளியாகிய அஞ்சனா அஞ்சானி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எந்திரன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்க எங்க படத்துக்கு வாங்க என்று ரன்பீர் மேடையிலேயே குறிப்பிட்டார். சமீப காலங்களில் தமிழ் சினிமாவை பாலிவுட் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. மேலும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளியது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. அதை உடைக்கவும், தமிழ் சினிமா எப்போதும் ராஜா என்று காட்டவும் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் முக்கியமான வாய்ப்பு.

90களில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் என்று இருந்த தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார் ரஜினிகாந்த். சிவாஜி, எந்திரனில் அது இன்னும் பெருகி உலகளாவிய மார்க்கெட்டை அடைந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு சீனா மார்க்கெட் மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சரியான திட்டமிடலோடு 2.0 படத்தை சீனாவில் ரிலீஸ் செய்தால் மிகப்பெரிய வசூலை பெறுவதோடு, தமிழ் சினிமாவுக்கு சீனாவிலும் மார்க்கெட்டை விரிவுபடுத்த வாய்ப்பு அமையும்.

அமெரிக்காவில் தேங்க்ஸ்கிவிங்க் வாரத்துக்கு அடுத்த வாரமே ரிலீஸ் ஆவது படத்தின் வசூலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஆங்கில படங்கள் ஏதும் போட்டிக்கு இல்லாதது கூடுதல் வாய்ப்பு.

படம் வியாழக்கிழமை ரிலீஸ் ஆவதால் முதல் 4 நாட்கள் வசூல் பெரிய அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் முதல் நாள் 200 முதல் 230 கோடிகளும், 4 நாட்களில் 750 முதல் 800 கோடிகள் வரை வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

அச்சுறுத்தல்:

படம் சாதாரண நாட்களில் ரிலீஸ் ஆவதால், படத்தின் கண்டெண்ட் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். தவறினால் தாக்குபிடித்து பெரிய வசூலை கொடுப்பது மிகவும் சிரமம்.

சமீப காலங்களில் நவம்பர், டிசம்பர் என்பது பொதுவாக தமிழ்நாட்டில் நல்ல சீசனாக இல்லை. வடகிழக்கு பருவமழை சென்னை, கடலூர் உட்பட பல மாவட்டங்களை துவைத்து எடுத்தது என்பது வரலாறு. 2015ல் டிசம்பர் 1ஆம் தேதி தான் சென்னை வெள்ளமும் வந்தது.

கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதும் காலமாக இருப்பதும், குழந்தைகள் விரும்பி பார்க்கும் 2.0 படம் விடுமுறையே இல்லாத சாதாரண நாட்களில் வெளியாவதும் வசூலில் சிறிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

பாகுபலி 2 (கோடை விருமுறை), டங்கல் (கிருஸ்துமஸ்) படங்கள் வெளியானது விடுமுறை நாட்களில். அத்தோடு போட்டிக்கு எந்த படமும் இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆகியவை. ஆனால், 2.0 ரிலீஸுக்கு முந்தைய வாரம் (நவம்பர் 23), கரண் ஜோகரின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், நவம்பர் 30ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் கேதர்நாத், அதற்கு அடுத்த வாரம் (டிசம்பர் 7) அஜய் தேவ்கனின் டோட்டல் தமால் படங்களும் ரிலீஸ் ஆகின்றன. அதுவும் டோட்டல் தமால் 3டியில் ரிலீஸ் ஆகும் படம். 2.0 உடன் ஒப்பிடுகையில் சின்ன படங்களாக இருந்தாலும் 3 படங்களும் சேர்த்து குறைந்தபட்சம் 300 கோடி வசூல் செய்யும் என்பதால் வசூல் இழப்பு 2.0 படத்துக்கு தான். இந்தி வினியோகஸ்தர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினாலே இந்த குழப்பங்களை தவிர்த்து விட முடியும்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Will create record rajinis 2

Best of Express