மாநில வரி விதிப்பில் மாற்றம் வரும்வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனால், தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘மெர்சல்’, திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான்.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அப்பா - இரண்டு மகன்கள் என அருமையான காம்பினேஷனில் நடித்துள்ளார் விஜய். அப்பா விஜய் பண்ணையாராகவும், மகன்களில் ஒரு விஜய் டாக்டராகவும், இன்னொருவர் மேஜிக் கலைஞராகவும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தைத் தயாரித்துள்ள தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனத்துக்கு, இது நூறாவது படம். அதனால், மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்து வருகின்றனர். 100 கோடியைத் தாண்டி இந்தப் படத்துக்காக செலவு செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என பல மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. அனைத்துப் பணிகளும் முடிந்து, சென்சார் சான்றிதழ் கூட வாங்கியாகிவிட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். எனவே, குழந்தைகள் பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.
ஆனால், தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாவதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து கடந்த 6ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராடி வருகின்றனர் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும். ஆனால், கேளிக்கை வரியை விலக்கிக் கொள்ளாத அரசு, கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தது.
அதன்பிறகாவது சிக்கல் தீர்ந்து புதுப்படங்கள் ரிலீஸாகும் என்று பார்த்தால், மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் ஓகேவாம். ஆனால், தனி திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் திருப்தி அளிக்கவில்லையாம். எனவே, இதில் மாற்றம் வரும்வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனால், தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘மெர்சல்’, திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான். எனவே, எப்படியாவது இந்தப் பிரச்னையை சரிசெய்யச் சொல்லி விஷாலுக்கு நெருக்கடி கொடுக்கிறதாம் விஷால் தரப்பு.