பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென்று வெளியேறி இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு, பிக் பாஸ் வீட்டில் இந்த இந்த வாரம் கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கும் சரவணன் சொன்ன வார்த்தை ஒரு காரணம் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கியது. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். சினிமா, டிவி, கலை, இசை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பிக் பாஸ் சீசன் 6-ல் முழுவதும் வித்தியாசமான ஒரு துறை சார்ந்த போட்டியாளராக அரசியல் துறையில் இருந்து விக்ரமன் கலண்துகொண்டார். அதே போல, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இலக்கியத் துறையைச் சேர்ந்த எழுத்தாளர், நடிகர், கதை சொல்லி பவா செல்லதுரை போட்டியாளராக அறிமுகமானார்.
பவா செல்லதுரை எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை சுவாரசியமாக சொல்வதில் புகழ்பெற்றவர். இவர் கதை சொல்வதைக் கேட்பதற்கு ஏராளமான வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள்.
எழுத்தாளர் பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்ற செய்தி வெளியானபோது, பலரும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் இவர் எதற்கு கலந்துகொள்கிறார். பிக் பாஸ் வீட்டுக்கு போய் இருக்கின்ற பெயரையும் புகழையும் கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்று பலர் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், பிக் பாஸ் வீட்டில் இவரால் எல்லாம் தாக்குபிடிக்க முடியாது, டாஸ்க், கேம், எலிமினேஷன், குரூப்பிசம் இதையெல்லாம் அவரால் செய்ய முடியாது, அதனால், முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ வெளியேறிவிடுவார் என்று கூறி வந்தனர்.
அதே போல, பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் எழுத்தாளர் ஆதவன் எழுதிய ‘ஓட்டம்’ சிறுகதை சொன்னபோது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்வதாக இருந்தது. ஆனால், மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் புத்தகத்தில் இருந்து ஒரு நிகழ்வை கதையாக சொல்லும்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதை விவாதமாக்கினார்கள்.
பிக் பாஸ் வீட்டில் எச்சில் துப்பாதீர்கள், அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதீப் சொன்னபோது, அதை கான்சியஸாக மாற்றிக் கொள்ள முடியாது, இயல்பாக மாற வேண்டும் என்று கூறியதும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.
அதே போல, ஜோவிகா - விசித்ரா இடையேயான வாக்குவாதத்தின்போது, பவா செல்லதுரை ஜோவிகாவுக்கு ஆதரவாக எஜுகேஷன் ஒன்றுமே இல்லை என்று கூறியது நெட்டிசன்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் முதல்வாரமே இவ்வளவு விவாதங்களை உருவாக்கிய போட்டியாளர் என்றால் அது பவா செல்லதுரைதான், ஆனால், பிக் பாஸ் வீட்டில் டாஸ்க், கிச்சன் வேலைகளில் பவா செல்லதுரையின் பங்களிப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
முதல் வாரம் எலிமினேஷனில் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று போட்டியாளர்களிடம் கருத்து கேட்டபோது பெரும்பாலானவர்கள் பவா செல்லதுரைதான் வெளியேறுவார் என்று அவருடைய வயது, போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டு கூறினார்கள். இதனால், பலரும் பவா செல்லதுரைதான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அனன்யா ராவ் வெளியேறினார்.
இதையடுத்து, எழுத்தாளர் பவா செல்லதுரை இன்னும் ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மால் பாஸ் வீட்டுக்கே அனுப்பப்பட்டதால் அவர் சற்று சோர்வாக இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது வார தலைவராக நடிகர் சரவணன் தேர்வானார். இவர் பவா செல்லதுரை குறித்து பேசும்போது "சோம்பேறி" என்று குறிப்பிட்டாராம். இந்த வாரமும் பவா செல்லதுரை சின்ன வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இதனால், அதிர்ச்சியான பவா செல்லதுரை இரவு முழுக்க தூங்காமல் இருந்துள்ளார். இதனால், பவா செல்லதுரையின் கண்கள் கடுமையாக சிவந்திருந்தது.
மேலும், பவா செல்லதுரை தன்னால் இந்த வீட்டுக்குள் பல டாஸ்குகள் செய்ய முடியாது. ஆனால், எல்லாம் தெரிந்து தான் இந்த வீட்டிற்குள் வந்தேன். ஆனால், இங்கே வந்த பிறகு அதிகமான வன்மங்கள் என்னை சுற்றி இருப்பது எனக்கு தெரிகிறது. அதனால், என்னால் இங்கே தொடர முடியாது. என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்று பிக் பாஸ் இடம் பேச அதற்கு பிக் பாஸ், உங்களை மக்கள் இந்த வீட்டிற்குள் பார்க்க விரும்புகிறார்கள். அதனால் தான், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்றெல்லாம் பேசிப் பார்த்தார். ஆனால், அதற்கு பவா செல்லதுரை சம்மதிக்கவில்லை. அதோடு நீங்கள் உடனே இந்த வீட்டை விட்டு இன்று கிளம்ப முடியாது இன்று இரவு வரைக்கும் இங்கே தான் இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்காக ஒரு மருத்துவரை அனுப்புகிறோம். அவரிடம் பேசிவிட்டு அனுப்புகிறோம் என்று பிக் பாஸ் கூறி இருந்த நிலையில் அந்த மருத்துவரிடமும் பேசிவிட்டு மீண்டும் பவா செல்லதுரை என்னால் இங்கு இருக்க முடியாது. தான் உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோய் உள்ளேன். என்னை அனுப்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால், பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.