இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழைப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வாழை படத்தின் கதை தன்னுடையது என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் ஊடகங்களில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, இப்போதுதான் சோ. தர்மனின் வாழை கதையைப் படித்தேன், நீங்களும் படியுங்கள் என்று மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் சோ. தர்மன் எழுதிய வாழையடி கதையைப் பகிர்ந்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியானது. மாரி செல்வராஜ் வாழை படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயகுனர்கள் பலரையும் அழைத்து அவர்களுக்கு திரையிட்டுக் காண்பித்தார். இயக்குனர் பாலா, இயக்குனர் மணிரத்னம். இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்கள் வாழை திரைப்படத்தைப் பாராட்டியுள்ளனர். வி.சி.க தலைவர் திருமாவளவன் வாழைப் படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார்.
வாழை திரைப்படம் வாழைத்தார் சுமந்த தனது பால்ய கால வாழ்க்கை அனுபவம் என்றும் அதில் இறந்து போகும் பெண் தனது சொந்த அக்கா என்றும் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். மாரி செல்வராஜ்ஜின் சிறுவயதில் இப்படி ஒரு வலி நிறைந்த அனுபவமா என்று பலரும் வருத்தங்களைத் தெரிவித்து இருந்தனர்.
மாரி செல்வராஜ்ஜின் பால்ய கால வாழ்க்கை கதையான வாழை திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாழை திரைப்படத்தின் கதை தான் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், சோ. தர்மன் ஊடகங்களில் பேட்டி அளித்திருப்பது சினிமா வட்டாரத்திலும் இலக்கிய வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எழுத்தாளர் சோ.தர்மன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன்.
என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை.
என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால், டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி" என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு.
"வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்."
என்னை வாழை வாழ வைக்கவில்லை” என்று எழுத்தாளர் சோ. தர்மன் பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஊடகங்களில் பேட்டியளித்த எழுத்தாளர் சோ. தர்மன், “மாரி செல்வராஜ் என்னுடைய கதையை திருடிவிட்டார் எனக் கூறவில்லை. அவர் படிக்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால், கரு ஒன்று. அதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன் என்ற பெருமை இருக்கிறது. நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை மாரி தற்போது சினிமாவாக எடுத்திருக்கிறார். நாங்கள் பேசிய பிரச்னை ஒன்று. ஆனால், ஊடகம் மட்டுமே வேறு” எனக் கூறியுள்ளார்
வாழை படம் தன்னுடைய கதை என்று எழுத்தாளர் சோ. தர்மன் கூறியது குறித்து, இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், சோ. தர்மனின் கதையை இப்போதுதான் படித்தேன் என்றும் அதை அனைவரும் வாசியுங்கள் என்று அந்த கதையைப் பகிர்ந்துள்ளார்.
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) August 28, 2024
—
வாழைhttps://t.co/VRFo53NxFn
இது குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் ‘வாழையடி’ என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். இதோ அந்த வாழையடி சிறுகதை. அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். எழுத்தாளர் சோ. தர்மனுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.