சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சொகுசு கார் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார். இந்தக் காரிலிருந்து பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் இறங்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.
கோட்டூர்புரம் பகுதியை பரத்(வயது 23), ஆன்–லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உணவு வாங்குவதற்காக நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றார்.
அப்போது ஸ்டெர்லிங் சாலையில் இருந்து அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலைக்கு வந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த சொகுசு கார், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீதும், அங்கு நடைபாதையில் நின்று கொண்டிருந்த பரத் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பரத், அந்த வழியாக சென்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அதிவேகத்தில் ஓடிய அந்த கார், அங்குள்ள கடை ஒன்றில் மோதி நின்றது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பரத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை ஓட்டிவந்த வளசரவாக்கத்தை சேர்ந்த சூர்யா(24) என்பவரையும், காரில் அவருடன் இருந்த பாலாஜி என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான காரில் இருந்து பிரபல நடிகை யாஷிகா இறங்கிச்சென்றதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நடிகை யாரும் அந்த காரில் வரவில்லை. கைது செய்யப்பட்ட சூர்யா, பிரபல தொழில் அதிபரின் மகன் என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, “நான் உண்மையில் விபத்து நடந்த காரில் செல்லவே இல்லை. நான் காரில் இருந்ததாக வெளி வந்து கொண்டிருக்கும் செய்திகள் பொய்யாக பரப்படுகின்றன. என்னுடைய நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகத் தகவல் வந்தது.
அதனால் நான் வேறொரு காரில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். இதனால் நான் அந்த காரில் இருந்ததாக பலர் பொய்யான தகவலைத் தெரிவித்து வருகின்றனர். இது போன்று போலி செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப் போகிறேன்” என்று விளக்கமளித்துள்ளார்.